தமிழ்நாட்டில் பண்பாடு செழிக்கிறது. பல வரலாற்று பெருமைகளை அப்பகுதி கொண்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் அழகு சேர்க்கும் வியப்பான கட்டிடங்களில் பல, தமிழ்நாட்டு மன்னர்களால் பழங்காலத்தில் கட்டப்பட்டவை. கோயில்கள் முதலிய வழிபாடு தலங்களும் கோட்டைகளும் இதில் அடங்கும்.
தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட பிரகதீசுவரர் கோயில் தமிழர் கட்டிடக் கலையின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. இது ‘தஞ்சை பெரிய கோயில்’ எனப் பிரபலமாக அறியப்படுகிறது. முதலாம் இராசராச சோழரால் இந்த ஆலயம் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மட்டுமே 216 அடி உயரமானது. இது உலகின் முதல் கருங்கல் கோயில் கோபுரமாகும். கட்டிடக்கலையோடு சிற்பக்கலை, ஓவியக்கலை முதலியவற்றில் தமிழர்களின் பெருமையைக் காட்டுகிறது இக்கோயில்.
பழங்காலத் தமிழ் எழுத்துக்கள் உள்ள கல்வெட்டுக்களை இக்கோயிலில் காணலாம். கோயில் அமைப்பு, கோயில் இயக்கங்கள், முறையாகக் கொண்டாடப்பட வேண்டிய விழாக்கள், ஆகியவைப் பற்றிய தகவல்கள் இந்தக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்து சோழர்களின் வாழ்க்கைமுறையை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகியவையும் தமிழ்நாட்டு மன்னர்களால் கட்டப்பட்டு உலகப்புகழ் பெற்றுள்ளன. உலக அமைப்புகளும் உள்ளூர் அமைப்புகளும் இக்கட்டிடங்களைக் கவனமாகப் பராமரிக்கின்றன.
ஆலயங்களைத் தவிர்த்து, சோழர்கள் கட்டிய கல்லணை பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் உறுதியாக நிற்கிறது. கரிகாலன் என்ற சோழ மன்னரால் முதலாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இந்தக் கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி.
முன்னர் காவிரி ஆற்றில் அடிக்கடி பெருவெள்ளம் வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையைக் கண்டார் கரிகால் சோழர். வெள்ளப்பெருக்கை தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கல்லணை கட்டப்பட்டது.
இந்தியாவில் மற்றுமொரு பழைமைவாய்ந்த கட்டடம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஷாஜகானால் இந்த மாளிகை எழுப்பப்பட்டது. இந்தப் பிரமிக்க வைக்கும் மாளிகையை அரசர் ஷாஜகான் தமது இறந்துபோன மனைவி மும்தாஜின் நினைவில் கட்டினார். தாமரை வடிவிலான ஓர் அழகான கலசத்தைத் தாஜ்மகாலின் உச்சியில் காணலாம். பல நாடுகளைச் சேர்ந்த கட்டிடக்கலை அம்சங்களைத் தாஜ்மகால் ஒன்றிணைக்கிறது.
பல அரிய, பிரமிக்கத்தக்க கட்டடங்களைத் தங்களின் வாழ்நாளில் உருவாக்கி உள்ளனர் தமிழர் மன்னர்கள். வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதோடு, இக்கட்டடங்கள் தொடர்ந்து தமிழர் பாரம்பரியத்தை உலகெங்கும் பரப்பி வருகின்றன.