பழங்காலத்து மன்னர்களின் அரசாங்கமும் ஆட்சியும் நவீன காலத்திலிருந்து வேறுபட்டிருந்தது. அக்காலத்தில் மன்னர்கள் எப்படிச் செயல்படவேண்டும், எவ்வித குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என கூறுகிறது திருக்குறள். ‘இறைமாட்சி’ எனும் அதிகாரத்தில் இந்தக் கருத்துக்கள் உள்ளன. குறிப்பாக, ஆறு சிறப்புகள் உடைய அரசே சிறந்த அரசாகும் என்கிறது இந்த அதிகாரத்தில் உள்ள முதல் குறள். ஆற்றல் மிகுந்த படை, அறிவார்ந்த குடிமக்கள், அதிக வளம், குறையற்ற அமைச்சு, வலுவான நட்பு, அழிக்க முடியாத அரண் ஆகியன இந்த ஆறு சிறப்புகள்.
இத்தகைய அரசை அமைப்பதற்கு, ஓர் அரசன் துணிவுடன் இருக்கவேண்டும். அதே சமயம், இரக்கங்காட்டி, அறிவார்ந்த சிந்தனையுடன் உயர்ந்த குறிக்கோள்களை அடையவேண்டும். இந்த நான்கு பண்புகளையும் அரசர்கள் கொண்டிருப்பது அவசியம். மேலும், அநீதிக்கும் பகைவர்களுக்கும் அவர்கள் பயப்படாமல் இருக்கவேண்டும். ஆபத்து வருவதற்கு முன்னர் அதனை எதிர்பார்த்துத் தடுக்கும் அறிவும் தேவை, ஆபத்து ஏற்பட்டதன் பின்னர் உறுதியாக இருப்பதும் தேவை.
மேலும், சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, எல்லா இடங்களிலும் சரியானதைச் செய்வதற்கான துணிவு ஆகிய மூன்றையும் நாட்டை ஆளுபவர்கள் கொண்டிருக்கவேண்டும். அரசர்கள் காண்பதற்கு எளிமையாக இருப்பதும் அவர்களின் புகழை உயர்த்தும். எளிமையாகக் காட்சி அளிக்கும் மன்னரே நீதி கேட்டு வருவோருக்கு நம்பிக்கை ஊட்டுவார். அதேசமயம், கடுஞ்சொற்கள் பேசாமல் இனிமையாக உள்ள மன்னர்கள் மக்களால் போற்றப்படுவர்.
மக்கள் கடுஞ்சொற்களால் குறைகூறும்போது மன்னர் அவற்றை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய குறைகளைப் பொறுமையாகக் கையாளும் மன்னரை மக்கள் வணங்குவர் என்கிறது திருக்குறள்.
அறநெறிகளைப் பின்தொடர்ந்து, குற்றம் புரியாமல், வீரத்தோடும் மானத்தோடும் ஆட்சி செய்யும் மன்னர் சிறப்பானவர். அடிப்படை பண்புகளைக் கொண்ட நல்ல மன்னர்களைவிட இவரே சிறந்து விளங்குவார்.
நல்ல அரசாட்சியின் குறிக்கோள் என்ன? எதனை மன்னர்கள் முன்னிலைப்படுத்தவேண்டும்? முதலில், நாட்டிற்காகப் பணம் ஈட்டும் வழிகளை மேம்படுத்துவது அரசனின் கடமை. அந்நிதியைத் தக்க முறையில் சேமித்து வைத்து, பின்னர் காக்கவேண்டும். அப்படிச் சேமித்த நிதியை ஒழுங்காக வகுத்துப் பொறுப்புடன் செலவு செய்வதும் அவரின் கடமை.
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப் பேசுவது, நியாயமான ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது என இந்நான்கு கடமைகளும் அரசர்களுக்கு உண்டு. இவ்வகையில், நல்ல ஆட்சிமுறை அமைப்பதற்கு அவசியமான கட்டமைப்பைத் திருக்குறள் பரிந்துரைக்கிறது.

