சங்ககாலத்தில் பல மன்னர்கள் கொடைத்தன்மையுடன் இருந்தனர். மக்களின் தேவை அறிந்து அவர்கள் பொதுநலத்துடன் செயல்பட்டனர். அதில் ஏழு மன்னர்களின் கதைகள் குறிப்பாக அதிகம் பேசப்படுபவை. இவர்களைக் கடை ஏழு வள்ளல்கள் என அறிகிறோம். இந்த ஏழு வள்ளல்களின் கதைகள் மன்னர்களின் பண்புகளைக் காட்டுகின்றன.
பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை அந்தக் காலத்தில் ஆண்டவர்கள். தங்களின் கொடை பண்புகளின் மூலம் இவர்களின் மக்களின் மனதைக் கவர்ந்தனர்.
குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை வழங்கினார் பேகன். பழனி மலைக்குத் தலைவராக இருந்த இவர், ஒருநாள் மயில் ஒன்று சத்தம் போட்டதைக் கேட்டார். அது மழை குளிரில் நடுங்குகிறது என அவர் எண்ணினார். உடனே, தன் போர்வையை அம்மயிலுக்கு உடுத்திவிட்டார் பேகன். அந்த மயில் அப்போர்வையைப் பயன்படுத்துமா, பயன்படுத்தாதா என்றெல்லாம் எண்ணாமல், உடனே அச்செயலை அவர் புரிந்தார்.
இதனை ‘கொடைமடம்’ என புலவர்கள் கூறினர். மடமை என்பதற்கு அறியாமை என்று பொருள். அதாவது, இவருக்கு இதைத்தான் கொடுக்கவேண்டும் என்று எண்ணாமல் கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதுதான் இந்த பண்பு. கொடுக்கவேண்டும் என தோன்றிய உடனே செயல்படுவதை கொடைமடம் எனும் சொல் குறிக்கிறது.
பறம்புமலை பகுதியை ஆண்டுவந்தார் பாரி மன்னர். முல்லைக் கொடி ஒன்று வாடி நிற்பதைக் கண்டு தன் தேரையே அவர் அதற்கு வழங்கினார். எதையும் பற்றிக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்த முல்லைக் கொடியை வழியில் கண்ட இவர், அது பற்றிக்கொண்டு வளர்வதற்கு தமது தேரை அங்கே நிறுத்திவிட்டு சென்றார். மழை போன்ற பொதுநலம் கொண்டவர் மன்னர் பாரி என இலக்கியங்கள் பாடுகின்றன.
நீண்ட நாள் வாழ வைக்கக்கூடிய நெல்லிக் கனி ஒன்றை மன்னர் அதியமான் கண்டெடுத்தார். இக்கனியை உண்டோர் மூப்படையாமல் நீண்ட காலம் வாழ்வார்களாம். அதனை தான் உண்ணாமல் புலவர் ஔவையாருக்கு கொடுத்து மகிழ்ந்தார் அதியமான்.
தேடி வந்து தங்களை வாழ்த்திச் செல்லும் புலவர்களுக்கு பொன்னும் பொருளும் வழங்குவது மன்னர்களின் வழக்கமாக இருந்தது. தங்களிடம் உதவி கேட்டு வந்தோருக்கு இல்லை என கூறாமல் உதவி புரிந்தனர் அக்காலத்து மன்னர்கள். இப்படி இந்த மன்னர்கள் ஆற்றிய அரிய செயல்கள் அவர்களின் பெருந்தன்மையை போற்றுவதாக உள்ளன.

