இந்தியாவைக் கடந்த தமிழ் மன்னர்களின் ஆட்சி

2 mins read
020bc20e-959d-4814-af38-f55487542008
-

சோழர்களின் வரலாறு மிகவும் பழைமையானது. மகாபாரதத்திலும், கல்வெட்டுகளிலும் சோழர்கள் பற்றிய செய்திகளைக் காணலாம். முற்காலச் சோழர்களில் கரிகாலன் சிறந்து விளங்கினார். அவர் கட்டிய கல்லணை இன்றும் நீர் மேலாண்மைக்கு சாட்சியாக உள்ளது.

கிபி 9-ம் நூற்றாண்டின் இடையில் ஆட்சிக்கு வந்த சோழர்கள் ‘பிற்கால சோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். விஜயாலய சோழனின் மகன் ஆதித்தன் பிற்கால சோழர்களின் எழுச்சிக்கு வித்திட்டார். ஆதித்தனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து மதுரையை வென்றார். அதன்பின்னர் உத்தம சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என பல மன்னர்கள் தங்களின் நாட்டை ஆண்டனர்.

சோழ மன்னர்களில் மிகச்சிறந்த ஆட்சியாளராக ராஜராஜ சோழன் கருதப்படுகிறார். சேரர், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் ஆகியோரை போரில் வென்று சோழ பேரரசை அவர் விரிவுப்படுத்தினார். இவரின் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவையும் கடந்து பரந்து விரிந்திருந்தது. இவர் கி.பி 1010-ம் ஆண்டில் தஞ்சையில் சிவன் கோயில் ஒன்றினைக் கட்டினார். இதுவே இன்று தஞ்சை பெரிய கோயில் என அறியப்படுகிறது. பின்னர் 1014-ல் இவர் இறந்துபோயினார். 

-

அடுத்த தலைமுறையில் ராஜேந்திர சோழன் ஆட்சி புரிந்தார். அவரின் காலத்தில் தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்கள் சோழ பேரரசில் இருந்தன. அத்துடன், பூட்டான், வங்காளதேசம், மியான்மர், சீனாவின் சில பகுதிகள், தென்கிழக்காசிய நாடுகளில் சில ஆகியன சோழர்களால் ஆளப்பட்டவை. இதில் சிங்கப்பூரும் அடக்கம். இவ்வாறு கடல் எல்லைகளைக் கடந்து சோழர்களின் கொடி பறந்தது. 

தென்கிழக்காசிய நாடுகளுக்கு சோழர்கள் இந்து மதத்தை பரப்பினர். இந்துமத வழிபாட்டில் சோழர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்பழக்க வழக்கங்கள் அவர்கள் ஆண்ட நாடுகளுக்கும் பரவியது. 

எனவே சோழ வம்சம் அந்த நேரத்தில் உலகின் மிக சக்திவாய்ந்த அரசாக மாறியது. உலக வரலாற்றின் மிகப்பெரிய பேரரசர்களாகவும் சோழர்களை மாற்றியது. உலக வரலாற்றை எழுதும் போது, அசோகர், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் தவிர்க்க முடியாத மன்னர்களாக மாறினர்.