மன்னர்கள் கடைபிடித்த நீதி

மன்னர்கள் கடைபிடித்த நீதி

2 mins read
18e3f1a2-fde8-4d05-babc-3c2855ff504b
-

தமிழ் மன்னர்கள் நீதி தவறாமல் ஆட்சி புரிந்த பெருமை உடையவர்கள். பெரும்பாலும், நல்ல மனிதர்கள், நல்ல தலைவர்கள் ஆகியோருக்கான குணங்களைக் கொண்டோராக தமிழ் மன்னர்கள் மக்களின் நினைவில் உள்ளனர். முக்கியமாக, நியாயமான முறையில் தக்க நீதி வழங்குவது அரசர்களின் கடமை. 

இக்காலத்து சமூகம் பெரிதும் மாறியுள்ளது. ஆனால், சமூகத்தில் வெவ்வேறு பிரிவினருக்கு இடையே உள்ள வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன. ஏழை பணக்காரர் பிரிவு, செய்யும் தொழில்களுக்கு ஏற்ப பிரிவு என பல வேறுபாடுகள் அன்றைய சமூகத்திலும் இருந்தன. அத்தகைய வேறுபாடுகளை மனதில் கொள்ளாமல் அனைவரையும் மன்னர்கள் சமமாக கருதவேண்டி இருந்தது. 

மனிதர்களை மட்டுமின்றி, மிருகங்களையும்கூட சமமாக நடத்துவது அவசியம் என உணர்த்தியவர் மனுநீதி சோழர். இவர் பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குபவர் என போற்றப்பட்டவர். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தம்மிடம் நேரில் வந்து முறையிடும் வசதியை அமைக்க அவர் எண்ணினார். தம் அரசவைக்கு வெளியே பெரிய மணி ஒன்றினைக் கட்ட ஏற்பாடு செய்தார். ‘ஆராய்ச்சி மணி’ என இது அறியப்பட்டது. இந்த மணியை அடிப்போரின் புகார்களைக் கேட்டு அதற்குத் தக்க தீர்ப்பு வழங்கி வந்தார் மனுநீதி சோழர். 

-

ஒருநாள் பசு ஒன்று ஆராய்ச்சி மணியை அடித்ததைக் கண்டார் மன்னர். விசாரித்ததில், அப்பசுவின் கன்று ஒன்று சாலையில் தேரில் அடிபட்டு இறந்ததை அறிந்துகொண்டார். அத்தேரை ஓட்டியதோ மனுநீதி சோழரின் சொந்த மகன் வீதிவிடங்கன். அவரின் தேர்ச்சக்கரத்தில் மாட்டியே அக்கன்று இறந்தது. 

மனுநீதி சோழரின் தீர்ப்பு அனைவரையும் வியக்க வைத்தது. தம் மகனுக்கு மரண தண்டனை விதித்தார் மன்னர். மனுநீதி சோழர் தாமே தேரை ஓட்டிக்கொண்டு போய் தம் மகனைக் கொன்றதாக இலக்கியங்கள் கூறுகின்றன. கல்வெட்டுக்களிலும், பழங்காலத்து ஓவியங்களிலும் இந்த நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. 

நீதிக்கும் நேர்மைக்கும் மற்றுமொரு சிறந்த சான்றாக இருப்பவர், நெடுஞ்செழியன் பாண்டியன். இவர் சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிறார். கண்ணகியின் கணவனான கோவலனுக்கு தவறுதலாக இவர் மரண தண்டனை விதித்தார். மன்னரின் தவற்றை கண்ணகி சுட்டிக்காட்டும்போது அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தீர விசாரிக்காமல் தவறுதலாக நீதி வழங்கிய பாண்டியன், குற்ற உணர்ச்சியில் தம் உயிரை விட்டான். 

இத்தகைய கதைகளும் நிகழ்வுகளும் நமக்கு அக்காலத்து மன்னர்களின் பண்புகளைக் காட்டுகின்றன. தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் பல படிப்பினைகளை தமிழ் மன்னர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர்.