சங்க கால மன்னர்கள்

சங்க கால மன்னர்கள்

2 mins read
19da63d9-4772-4655-8a50-4e844aa5ecc6
-

சங்க காலத்தில் தமிழ்நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்திருந்தது. அவற்றை முறையே சேர, சோழ, பாண்டிய அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சங்க இலக்கியத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், அவர்களுடைய அரசியல் வரலாற்றைத் முழுதாக எழுதுவதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கவில்லை.  சங்க கால மன்னர்களை பெரும் மன்னர்கள் என்றும் குறுநில மன்னர்கள் என்றும் பிரித்துக் காணலாம். பெரும் மன்னர்கள் என்போர் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர். குறுநில மன்னர்கள் என்போர் வேளிர், கோசர் போன்ற சிற்றரசர்கள் ஆவர். சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மூவேந்தர்கள் என அறியப்பட்டனர். இவர்களுக்குத் தனியே கொடியும் சின்னமும் இருந்தது. சேரர்கள் வில் சின்னத்தையும், சோழர்கள் புலி சின்னத்தையும், பாண்டியர்கள் மீன் சின்னத்தையும் கொண்டிருந்தனர். இச்சின்னங்கள் அவரவர் கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்தன. போரின்போது பகைவரின் கொடியை அழிப்பது வீரர்களின் நோக்கமாக இருந்தது. இம்மூவருக்குள்ளே போட்டிகளும், போர்களும் அடிக்கடி நடைபெற்று வந்தன. 

சங்க கால மன்னர்கள் எப்போதும் அண்டை நாடுகளைக் கைப்பற்றும் எண்ணத்துடனே இருந்து வந்தனர். இதற்காகப் போர்க்கருவிகளையும் பல படைகளையும் நிரந்தரமாக வைத்திருந்தனர். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை என வெவ்வேறு படைகளை அரசர்கள் அமைத்தனர். 

இப்படைகளில் வீரம் கொண்ட படைவீரர்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சங்ககால மன்னர்கள் பல இடங்களை போரில் வென்றுள்ளார்கள். இதற்கு கரிகால் சோழன் ஓர் எடுத்துக்காட்டு. அவன் இலங்கைக்கும் படையெடுத்துச் சென்று போரில் வென்றான்.

நிதி இல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியாது. ஆகவே, நாட்டிற்கான வருமானம் பல வழிகளில் திரட்டப்பட்டது. நிலவரி அரசின் முக்கிய வருவாய் ஆகும். இவ்வருவாய்களுடன் சிற்றரசர்கள் செலுத்திய திறையும் அரசாங்கத்தின் வருவாயில் முக்கிய இடம் வகித்தது. 

மன்னன் போர் புரிந்து ஒரு நாட்டை வென்றால் பெரும்பாலும் அந்நாட்டிலிருந்து செல்வங்களைக் எடுத்துக்கொள்வது வழக்கம். இச்செல்வங்களும் அரசிற்கு வருவாய் ஆகும். குற்றம் புரிந்தோர் அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்தினர். பொருள்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது வரி வசூலிக்கப்பட்டது. இது போன்ற வரிகளை மக்கள் பொருளாகவோ அல்லது பணமாகவோ அரசுக்குச் செலுத்தலாம்.

அயல்நாடுகளோடு வணிகமும் செய்து வந்தனர் தமிழ் மன்னர்கள். ‘புகார்’ பகுதி முக்கியத் துறைமுகமாக சங்க காலத்தில் விளங்கியது. ரோமாபுரியுடன் தமிழ்நாட்டு மன்னர்கள் வணிகம் செய்தனர். இதனால், தமிழகத்திற்குப் பெரும் செல்வம் கிடைத்தது.