நாணயங்கள் கூறும் மன்னர் காலத்து வரலாறு

நாணயங்கள் கூறும் மன்னர் காலத்து வரலாறு

2 mins read
0cbb6536-717f-4669-bc1d-338a984ba3ea
-

பழைமையான இடங்களையும் தொன்மையான கல்வெட்டுகளையும் பார்த்து வளர்ந்தார் 38 வயது திரு ரஞ்சித் தனராஜ். இவர் கடந்த 28 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களைச் சேகரித்து வருகிறார். 

தமிழ் வரலாற்றின் மீதான ஆர்வம் இவரது குடும்பத்தில் பல தலைமுறைகளாகவே இருந்து வருகிறது. பத்து வயதில் இவருக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப்பருவத்திலிருந்தே வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவர் நேரத்தைச் செலவிடுவார். இன்றுவரை அதேபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாணயங்களுடன் அஞ்சல்தலைகளையும் அவர் சேகரித்துவருகிறார். 

திரு ரஞ்சித் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். வரலாறுமீதான ஆர்வத்தால் அத்துறையிலும் கல்வி பெற்றார். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார் திரு ரஞ்சித். 

தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் இவர், சிங்கப்பூரின் செங்காங் வட்டாரத்தில் 15 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இங்கும் பழைமையான நாணயங்களைச் சேகரிப்பதை இவர் தொடர்கிறார். 

தம்மிடமுள்ள ஆகப் பழைமையான நாணயம் சங்ககால பாண்டியர் காலத்து வெள்ளி முத்திரைக் காசு என்றார் திரு ரஞ்சித். அது கி.மு. 300 - 400 காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.  மேலும், கி.மு. 200 - 300 காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாண்டியன் பெருவழுதி ஆட்சிகாலக் காசும் இவரிடம் உள்ளது.

உத்தம சோழர், இராஜராஜ சோழர், இராஜேந்திர சோழர், விக்கிரம சோழர் போன்ற மன்னர்களின் நாணயங்கள் திரு ரஞ்சித்திடம் உள்ளது. அதோடு, மதுரை சுல்தான் ஜலாலுதீன் அசன் ஷா காலத்தின் இரண்டு அரிய நாணயங்கள், நாயக்க மன்னர்களின் நாணயங்கள், ஆகியவை அவரின் சேகரிப்பில் உள்ளன. 

“ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை விதமான நாணயங்கள் இருந்தன என்பதற்கான குறிப்புகள் இல்லை. அதனால், ஒவ்வொரு நாணயமும் நீண்டகால ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறது; பல புதிய தகவல்களைக் கற்றுத் தருகிறது,” என்றார் திரு ரஞ்சித். 

ஒருமுறை எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓர் ஏலத்தில் 1,300 ஆண்டுப் பழமைவாய்ந்த ஒரு தமிழ் வரலாற்று நாணயம் கிட்டியதாக திரு ரஞ்சித் குறிப்பிட்டார். 

சேகரித்த நாணயங்களை வருங்காலத்தில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க அல்லது பழைமையான பொருள்களைச் சேகரிப்பவர்களிடம் விற்க இவர் திட்டமிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் இவர், மதுரை வரலாறு, நாணயவியல் குறித்த ஆங்கில நூலை எழுதி வருகிறார். அதனை இவ்வாண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ள இவர், தமிழிலும் அத்தகைய நூலை வெளியிடும் திட்டம் இருப்பதாகச் சொன்னார்.