70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் கல்கி எழுதியா நாவலதான், ‘பொன்னியின் செல்வன்’. சோழர்களின் வரலாற்றைக் காட்டும் ஒரு கற்பனைக் கதையை இந்நாவல் கூறுகிறது. மக்களிடம் இந்நாவல் பெரிதும் பிரபலமாகியது அக்காலத்தில்.
சோழர்களின் ஆட்சி கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் நீடித்தது. தமிழகத்தைத் தாண்டி அதன் ஆட்சி விரிந்தும் இருந்தது. அதன் தொடக்கக்கால கதையாக அமைந்துள்ளது பொன்னியின் செல்வன். இது தமிழரின் ஆடல், பாடல், ஓவியம், கட்டடக் கலைகள் சிறந்திருந்த காலம்.
சோழர்கள் பல விதத்தில் நமக்கு முன்னோடியாக இருந்துள்ளனர். இன்றைய வாக்குச்சீட்டு முறையை அன்றே அவர்கள் வைத்திருந்தனர். ஓலைகளில் தலைவர்களின் பெயர்களை எழுதி போட்டு, பின்னர் குலுக்கல் முறையில் அவர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தனர். இதனை குடவோலை முறை என்று கூறுவர்.
அதே போல, அன்றே நீர் நிர்வாகத்துக்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருந்தனர் சோழர்கள். கரிகால் சோழன் அமைத்த கல்லணை இதற்கு சிறந்த ஓர் உதாரணம். மேலும், புலவர்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ் மன்னர்கள்.
10ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசியா வரை படையெடுத்தார் இராஜராஜ சோழர். இவர், சோழ மன்னர் சுந்தர சோழரின் இளைய மகன் ஆவார். அவரின் கற்பனைக் கதையே இந்நாவலின் கரு. இராஜராஜ சோழருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. அண்ணன் ஆதித்த கரிகாலரும், அக்கா குந்தவை தேவியும் அவரின் உடன்பிறப்புகள். அவரின் உண்மை பெயர், அருண்மொழி வர்மன்.
நாவலின்படி, அருண்மொழி வர்மன் ஒரு பதின்ம வயது இளைஞன். யானைகளுடன் பேசும் அரிய திறன் பெற்றதோடு, பல கலைகளில் அவன் வல்லவன். தந்தை சுந்தர சோழருக்கு எதிராக சதி நடப்பது அவனுக்கு தெரிய வருகிறது. அதனை அவனும் வேறு பலரும் தடுக்க போராடுவதுதான் கதையின் முக்கிய அங்கம்.
பொன்னியின் செல்வன் நாவலின் கதை திரைப்படமாக அண்மையில் வெளிவந்தது. இரண்டு பாகங்களாக இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருந்தது. ஐந்து பாகங்களான பொன்னியின் செல்வன் நாவலின் கதையை அது சுருக்கமாக காட்டியது. இயக்குநர் மணி ரத்னம் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

