சிங்கப்பூர் 1,500க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கு உறைவிடமாய்த் திகழ்கிறது. ஆனால், அவற்றை அழியாமல் பாதுகாப்பது என்பது கடினமான காரியமே. கட்டடங்கள் எழுப்புவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் சிங்கப்பூர் காட்டுப்பகுதிகளை அழிக்கிறது. இதனால் உயிரினங்களின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது.
மலாயன் புலிகள் ஒருகாலத்தில் சிங்கப்பூரில் உலாவித் திரிந்தன. கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்த கடைசி மலாயன் புலிகளும் இறந்துபோயின. அக்காலத்தில் இவற்றை வேட்டையாடுவது பரவலாய் இருந்ததால் இந்நிலை ஏற்பட்டது.
தற்போது, சிங்கப்பூரின் கடைசி காட்டுப்பூனையாக இருக்கும் ‘லெப்பர்ட் கேட்ஸ்’ வாழ்வாதாரத்தைப் பல காரணிகள் அச்சுறுத்தி வருகின்றன. கடைசி நிலவரப்படி, 50 சிறுத்தைப் பூனைகள் மட்டுமே இங்கு எஞ்சி உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவது, காட்டுப் பகுதிகளை நாம் கூறு போட்டுப் பிரித்திருப்பது, சாலை விபத்துகள் ஆகியவை இவற்றைப் பெரிதும் பாதித்து வருவதாகக் கூறினார், ‘சுவேக்’ எனப்படும் சிங்கப்பூர் காட்டுப் பூனை நடவடிக்கைக் குழுவின் தொண்டூழியர் திருவாட்டி சத்யா திவாரி.
“நமது காடுகள், இயற்கைக் காப்பகங்களுள் சில விரைவுச்சாலைகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இது சிறுத்தைப் பூனை போன்ற வன விலங்குகளின் இயல்பு வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இதனால் சாலைக்கு ஓடி வரும் இவை, விபத்தில் சிக்கும் ஆபத்து பன்மடங்காகிவிட்டது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் சாலை விபத்துகளில் மாண்ட மிருகங்களின் எண்ணிக்கை 2021இல் 194ஆக உயர்ந்தது. இது, 2016இல் இருந்த எண்ணிக்கையைவிட இருமடங்காகும்.
“சிறுத்தைப் பூனைகள் அளவில் சிறியவை. இரவு நேர மிருகங்கள் ஆகிய இவற்றை எளிதில் காண இயலாது. அவற்றின் நலனைப் பேணிக் காப்பதில் இத்தகைய சிக்கல்கள் உள்ளன,” என்றார் திருவாட்டி சத்யா. கடைசியாகச் சிறுத்தைப் பூனையானது 2018இல் மண்டாய் பகுதியில் காணப்பட்டது.
சுவேக் குழுவில் இணைந்துள்ள திருவாட்டி சத்யாவின் மகள் அலிஷா சந்திராவும் இம்மிருகங்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படுவதாக உணர்கிறார். “மிருகங்கள் அதிகமாக கடக்கும் சாலைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகளுடன் சாலை வேக வரம்புகள் இருந்தால் மிருகங்கள் தொடர்பிலான சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்,” என்றார் இவர். சிறுத்தைப் பூனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதிலும் விலங்கு, வனப் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுவதிலும் அம்மா-மகள் இருவரும் பங்கேற்றுள்ளனர்.
மிருகங்கள் தொடர்பான சாலை விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ளது. பிகேஇ விரைவுச்சாலையின் மேல் ‘ஈகோ-லிங்’ எனும் இயற்கை பாலத்தை 2012ஆம் ஆண்டில் அரசாங்கம் அமைத்தது. இந்த விரைவுச்சாலை சிங்கப்பூரின் இரு முக்கியக் காடுகளைப் பிரித்தது. இப்பாலத்தை அமைத்ததன்மூலம், காட்டு விலங்குகள் சாலையில் கால் வைக்காமல் மேலிருக்கும் பாலத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தின.

