பொதுமக்களில் ஒருவரான ஆன் சி, சிங்கப்பூரில் உள்ள திடல்களில் ஏராளமான எலிப் பொந்துகள் இருப்பதைக் கவனித்தார். அங்கு வந்து உணவு அருந்துபவர்கள் விட்டுச்செல்லும் உணவுக் கழிவுகளும் குப்பைகளும் இச்சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்று அவருக்குத் தோன்றியது. மக்கள் தங்களது குப்பைகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்தினால் இந்தச் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது அவரின் எண்ணம்.
மற்றொருவரான சென் சியுசியா, கிட்டத்தட்ட அன்றாடம் தமது அக்கம்பக்கத்தில் கிடக்கும் குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தப்படுத்துகிறார். தமது வட்டாரத்தில் குப்பை குவிவது அதிகரிப்பதாக அவர் முறையிட்டார். ஒரு மணி நேரத்திலேயே மூன்றிலிருந்து ஐந்து பைகள்வரை குப்பைகள் நிரம்பி விடுகின்றனவாம்.
2023இல் சாவ்பாவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் இணைந்து ‘எனது கடமையல்லவோ, சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரத்துக்காக இணைந்து உழைப்பது!’ என்னும் நேரடிக் கலந்துரையாடலை நடத்தின. நாடெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் ஓர் அங்கமாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
2021ஆம் ஆண்டின் பொதுச் சுகாதார நிறைவு ஆய்வு முடிவுகள் இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது. இதன்படி, 73% பொதுமக்கள் சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என நம்பினர். 2019இல் இந்த விகிதம் 58% ஆக இருந்தது.
பொது இடங்கள், வசதிகளின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் சரிபார்ப்பதில் அரசாங்கத்துக்குப் பொறுப்பும் கடமையும் இருக்கும். அதே வேளையில், அரசாங்கத்தால் மட்டும் பொதுச் சுகாதாரத்தைப் பேண முடியாது என்றும் அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும் திரு பே விளக்கினார்.
தியோங் பாரு சந்தையில் துப்புரவாளராகப் பணிபுரியும் 81 வயது சியாவ் ஹுவெ கியாவ், ஒருமுறை மேசையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது பயன்படுத்தப்பட்ட டயப்பர் ஒன்றினை ஒரு வாடிக்கையாளர் தட்டுகளின்மீது வீசியதை அவர் நினைவுகூர்ந்தார். டயப்பரைக் குப்பைத்தொட்டியில் போடுமாறு அவர் வேண்டிக்கொண்டபோது அவ்வாடிக்கையாளர் தம்மைக் கண்டித்ததாகவும், தட்டுக்களைக் கழுவுவது உட்பட இதையும் கையாள்வது துப்புரவாளர்களின் பணியே என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
48 வயது துப்புரவாளர் சியா சியு கியென், வாடிக்கையாளர்களிடம் தட்டுக்களைத் திருப்பி வைக்கச் சொல்லி அன்பாகக் கேட்டுக்கொண்டாலும் சிலர் அதனை மறுத்து எதிர்த்துப் பேசுவதுண்டு என்று கூறினார். துப்புரவாளர்கள் மென்மையானவர்களாக ஆகிவிட்டனர் என்றோ, அடக்கம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர் என்றோ வாடிக்கையாளர்கள் வசைபாடுவர்.
துப்புரவாளர்களின் அனுபவங்களைக் கேட்டு, இச்சிக்கலைக் களைய அரசாங்கம் புது நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக நிகழ்வில் பேசிய திரு பே விளக்கினார். இவர், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஆவார். “அபராதம் விதிக்கப்படுவதோடு, குப்பை போடுவோருக்கு சைனாடவுன் போன்ற கூட்டமான இடங்களில் குப்பை பொறுக்குவது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம், பொதுத் துப்பரவாளர்களின் கடுமையான உழைப்பு குறித்து அவர்கள் அறிவர்,” என்றார் அவர்.

