சிங்கப்பூரில் சதுப்புநிலப் பாதுகாப்பு

2 mins read
e778f62a-c52d-4283-88e9-6ff4d55574b4
- Tamil Murasu

உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல், சுத்தமான தண்ணீர் தொழில்நுட்பத்தில் தொடர் முதலீடு போன்ற சிங்கப்பூரின் பற்பல முயற்சிகள் முழுமையடைந்து வருகின்றன. சுற்றுப்புறச்சூழல் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் திருவாட்டி ஷகுரா பஷீர், 33, இம்முயற்சிகளை நேரடியாகக் கண்டுள்ளார்.

இயற்கை அன்னையின் சக்தியைப் பயன்படுத்தி, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, உயிரினங்களை அழிவிலிருந்து காப்பது ஆகிய இரண்டு சவால்கள் முனைவர் பட்டப் படிப்பு மாணவரான திருவாட்டி ஷகுராவை மிகவும் கவர்ந்துள்ளன. 

இயற்கைப் பாதுகாப்பு, காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்தவற்றை நிலையான வகையில் நிர்வகிப்பது அவசியம். இத்தகைய நடவடிக்கைகள் பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வாக அமையலாம். 

கரியமில வாயுவைச் சிறிது சிறிதாகக் குறைக்கவும் இயற்கையிலிருந்து அகற்றவும், மரம், செடிகொடி, தாவரங்களை வளர்ப்பது அவசியம். இவை மண்ணிலும் வேர்களிலும் இயற்கையாக அந்த வாயுவைத் தக்கவைத்துக்கொள்கின்றன. 

சதுப்பு நிலப் பாதுகாப்புப் பல இயற்கை சார்ந்த நன்மைகளை ஈட்டும். அவற்றைச் சுற்றியுள்ள கடல் மட்ட உயர்வைக் கட்டுப்படுத்தும். அதோடு, காடுகளில் உள்ள மரங்களின் நிழல் குளிர்ச்சியை வழங்கிப் பூமியின் வெப்பத்திலிருந்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவும். இந்த இயற்கை வளங்களே உயிரினங்களின் பாதுகாப்பை, உணவு மற்றும் தண்ணீர்ப் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. இந்தச் சதுப்புநிலக் காடுகள் பலவித உயிரினங்களுக்கு வாழ்விடம் அமைத்துத் தருகின்றன.

“நகரமயமாதலின் அவசியத்தால், மரம் வெட்டுதல், பனை எண்ணெய் விற்பனை போன்ற லாபகரமான வியாபார வர்த்தகங்கள் வளர்ச்சியடையும். இதனால், பல்லுயிர்கள் செழிப்புடன் வாழும் இடமான காடுகள் அழிக்கப்படுகின்றன,” என்று திருவாட்டி ஷகுரா கூறினார்.

தென்கிழக்காசியாவில் இந்தப் பிரச்சினை வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆண்டுதோறும் விவசாயம், உணவு, மூலப்பொருள் தேவைகளுக்காக 1.2 விழுக்காடு காடுகள் இந்த வட்டாரத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சிங்கப்பூரின் சதுப்புநிலங்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மண்டாய் சதுப்புநிலமும் முகத்துவாரமும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட இருக்கிறது. இயற்கைவள விரும்பிகளுக்கும் பறவை ரசிகர்களுக்கும் பல வசதிகளுடன் இந்தப் புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. 

சுங்கை பூலோ ஈரநிலக் காட்டுப் பகுதியின் கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அந்த முகத்துவாரம்.