சுற்றுப்புறப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமூக அக்கறையுடன் ஈடுபடும் மாணவர்களை அங்கீகரிக்கும்வண்ணம் சிங்கப்பூர்ச் சுற்றுப்புற மன்றம், ‘பள்ளிப் பசுமை விருதுகளை’ வழங்கியுள்ளது. இதனையொட்டிச் சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மையை ஆதரிக்கும் புத்தாக்கச் சிந்தனையுடைய திட்டங்களுக்கான போட்டி அண்மையில் நடைபெற்றது.
பசுமை தொடர்பில் ஆக்கம் மிகுந்த திட்டங்களையும் பசுமைப் பொருளியலை ஆதரிக்கும் தீர்வுகளையும் பங்கேற்பாளர்கள் சமர்ப்பித்தனர். இப்போட்டியில் பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, உயர்கல்விக் கழகங்கள் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 286 கல்வி நிலையங்களிலிருந்து 300க்கு மேற்பட்ட திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து 21 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இதில் இவ்வாண்டு 13 கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் விருது பெற்றனர்.
ஜூரோங் பையனிர் தொடக்கக்கல்லூரி ‘வாண்டா மிஸ் ஜோக்கிம் நீடித்த நிலைத்தன்மை விருது’, ‘சிறந்த திரீ ஆர் விருது’, ‘தலைசிறந்த சுற்றுச்சூழல் திட்ட விருது’ என மொத்தம் மூன்று விருதுகளைத் தட்டிச்சென்றது. இந்தத் தொடக்கக்கல்லூரிக் குழுவினர் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை முன்வைத்தனர்.
மறுபயனீட்டை வலியுறுத்தி, பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் உள்ள ஆடைகளைப் பல்வேறு சமூக மன்றங்களின்வழி இரண்டு மாதங்கள் சேகரித்து மாணவர்கள் மறுசுழற்சி செய்தனர். அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் கூடுதல் மறுசுழற்சி குப்பைத் தொட்டிகளையும் இவர்கள் நிறுவினர். நீடித்த நிலைத்தன்மையை அன்றாட வாழ்வில் செயற்படுத்தும் வழிமுறைகளைக் கற்பிக்கும் சிறப்புப் பயிலரங்கையும் மூத்தோருக்காக இம்மாணவர்கள் நடத்தினர்.
இம்முயற்சிகளின்மூலம், மறுபயனீடு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் மேம்படும் என மாணவர்கள் நம்பினர். அத்துடன், தினசரி வாழ்வில் மறுசுழற்சி செய்வதைச் சுலபமாக்க மாணவர்கள் எண்ணினர்.
இம்முயற்சிகளில் பங்குகொண்ட 17 வயது மாணவி திருமலர் செந்தில்நாதன், “இப்போட்டியில் பங்குகொண்டதன்மூலம் சுற்றுச்குழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். அன்றாட வாழ்வில் நாம் விழிப்புணர்வுடன் நடந்துகொண்டால் மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்,” என்று கூறினார்.
இந்த விருந்தளிப்பு விழாவில் கல்வி மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவின் ஓர் அங்கமாகப் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த திட்டங்களின் கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது. அதனை மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டு களித்தனர்.
இத்தகைய திட்டங்கள் இளையர்களைக் கூடுதலாகச் சுற்றுப்புறப் பாதுகாப்பில் ஈடுபடுத்துகின்றன. இத்திட்டங்கள் அவர்களின் புத்தாக்க யோசனைகளை ஊக்குவித்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கும் ஆதரவு அளிக்கின்றன..

