உணவுப் பாதுகாப்புச் சிங்கப்பூரை அச்சுறுத்தும் பிரச்சினைகளுள் ஒன்றாகும். தற்போது நமக்குத் தேவைக்கு அதிகமாகவே உணவும் உணவுப்பொருள்களும் உள்நாட்டில் இருக்கின்றன. அவற்றின் இறக்குமதியும் சீராகவே இருக்கின்றது. ஆனால், இந்நிலை தொடருமா என்பது கேள்விக்குறியே. சிங்கப்பூர் உணவுப்பொருள்களில் 90% வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சிங்கப்பூரில் இயற்கை விளைநிலம் இல்லாததால், அரிசி, சோளம், காய்கறிகள் ஆகியவற்றை உள்நாட்டிலேயே வளர்ப்பது கடினம். பல்வேறு நாடுகளிலிருந்து இவை நமக்குக் கிட்டுகின்றன.
உதாரணத்திற்கு, நமது அரிசி தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. கோழி இறைச்சி மலேசியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வருகிறது. ஒரே உணவுப்பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அவசியம். அப்போதுதான், ஒரு நாட்டில் அந்த உணவுப்பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் நம்மால் தொடர்ந்து அதனை இறக்குமதி செய்ய இயலும்.
மலேசியா 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் கோழி இறைச்சி ஏற்றுமதியை முழுதாகத் தடுத்தது. ஏனெனில், வானிலை காரணமாகவும் நோய்த்தொற்றுக் காரணமாகவும் கோழி உற்பத்தி மலேசியாவில் குறைவாகி இருந்தது. மே மாதத்திலிருந்து ஜூலை மாதம்வரை, சிங்கப்பூர் மக்கள் இதனால் சற்றுத் திக்குமுக்காடினர். பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியையே பெரும்பாலான உணவுக்கடைகளும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், பிற நாடுகளையே நம்பி இருப்பது ஆபத்தானது. போர், நோய்த்தொற்று எனப் பல சூழல்களில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சிங்கப்பூருக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம். எனவே, உள்நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது அரசாங்கம்.
அடுக்கு விவசாய முறையைச் சிங்கப்பூர் பயன்படுத்துகிறது. நிலப் பற்றாக்குறையினால், இத்தகைய முறை நமக்கு வசதியாக அமைகிறது. எல்.இ.டி ஒளியைப் பயன்படுத்தி, சாதாரண விவசாய முறைகளில் கிடைப்பதைவிடப் பத்து மடங்கு அதிக விளைச்சலை இந்த அடுக்கு விவசாய முறை தருகிறது. மீன் விவசாயத்தையும் விரிவாக்க அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் 609.1 மில்லியன் முட்டைகள், 19,900 டன் கீரைகள், 4,400 டன் கடலுணவு ஆகியவற்றைச் சிங்கப்பூர் உள்ளூரில் உற்பத்தி செய்தது. உள்ளூரில் விளைந்த இந்த உணவுப்பொருள்களை ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ் முதலிய பேரங்காடிகளில் நாம் காணலாம். குறிப்பாக, இவற்றில் ‘சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டவை’ எனும் சிவப்பு நிற வில்லை ஒட்டப்பட்டிருக்கும்.
பல சிங்கப்பூர் நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றன. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் இறைச்சி, உணவு விரயத்தை உணவாக்குவது, என நல்ல யோசனைகளை இவை கொண்டுள்ளன. அவற்றுக்கு ஆதரவளிக்க நிதி உதவிகளையும் அரசாங்கம் வழங்கி வருகிறது.
இந்நிறுவனங்களின் பங்கை அதிகரிக்க, வெளிநாடுகளில் இந்நிறுவனங்கள் செயலாற்றுவதற்கும் இயக்கங்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் வழிவகுத்தும் வருகிறது.

