பழம்பொருள்கள்மீது நாட்டம்

பழம்பொருள்கள்மீது நாட்டம்

2 mins read
d9f13640-19c4-42c1-90f2-6dca73ad26c4
- MONETARY AUTHORITY OF SINGAPORE

கிஷன் சிங் என்பவரின் பழம்பொருள் சேகரிப்பு ஏழு வயதில் தொடங்கியது. தமது தாயாருடன் கிளார்க் கீ வட்டாரத்தில் வியாபாரச் சந்தை ஒன்றுக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அங்கு விற்கப்பட்ட ஆர்க்கிட் சித்திரம் பொறிக்கப்பட்ட பழைய $1 பணத்தாளைக் கண்டு வியந்தார். இதைக் கவனித்த அவரது தாயார் அந்த நாணயத் தாளைக் கிஷனுக்காக வாங்கினார். இன்றுவரை அதைப் பத்திரமாக வைத்துள்ள கி‌ஷன், மெல்லப் பழம்பொருள்கள்மீது நாட்டம் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, கிஷனின் எட்டாவது வயதில் அவரது தாத்தா தாம் வைத்திருந்த சிறப்புப் பழங்காலக் கடல்நாக நாணயத்தைக் கொடுத்தார். பழைய பணத்தாள்களும் நாணயங்களும் கிஷனை ஈர்த்தன. தமது தொடக்கப்பள்ளியில் சிற்றுண்டிக் கடைக்காரரிடம் கேட்டுப் பழைய பணத்தாள்களை மாற்றும் பழக்கமும் கிஷனுக்கு இருந்தது.

தபால் முத்திரைகள், புகைப்படக் கருவிகள், இசைத்தட்டுகள், நாணயங்கள், பூட்டுகள், கடிகாரங்கள், சீனப் புத்தாண்டிற்கென வெளியிடப்படும் சிறப்பு நாணயங்கள் எனக் கிஷன் தற்போது பலவற்றைச் சேகரித்துள்ளார். 

சிங்கப்பூர் 1965இல் மலேசியாவை விட்டுப் பிரிந்தபோது வெளியான ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள், 1965ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள் முதலியவற்றின் பிரதிகளையும் இவர் சேகரித்துள்ளார். 

பழைய பொருள்களைச் சேகரிப்பதுடன் அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரசிக்கவும் தமக்குப் பிடிக்கும் என்றார் கிஷன். உதாரணத்திற்குப் பழைய புகைப்படக் கருவிகளைக் காட்சிக்கு வைத்திருக்கும் ‘தி கேத்தே கேலரி’ இவருக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றாகும். கிஷனின் ஆர்வம் அறிந்து அவரின் தாயார் அவரது 16ஆவது பிறந்தநாளில்  நூறாண்டுபழமை வாய்ந்த புகைப்படக் கருவியைப் பரிசாக வழங்கினார். 

26 வயது கிஷன் தற்போது மனிதவளத் துறையில் பணிபுரிகிறார். தமது சிறுவயது பொழுதுபோக்கையும் விடாது தொடர்ந்து வருகிறார். 

“இன்றும் நான் வெளியே செல்லும்போது பழம்பொருள்கள் கண்ணில் பட்டால் அவற்றை ஆர்வத்துடன் ஆராய்ந்து பார்ப்பேன். என்னால் அவற்றை வாங்க இயலுமா என்று சிந்திப்பேன்,” என்றார் கிஷன். 

தற்போது குடும்பத்துடன் வசித்துவரும் கிஷன், தமது வருங்கால வீட்டில் சிறிய அருங்காட்சியகத்தை உருவாக்கப் போவதாகவும் பூரிப்புடன் சொன்னார். சுவரில் பதிக்கப்படும் பழைய ‘பெரனாக்கான்’ கற்கள் கிஷனுக்கு மிகவும் பிடித்தவை. பழைய கடைவீடுகளில் இவற்றைப் பார்த்தால் அங்கேயே நின்று ரசிப்பது இவர் வழக்கம். இச்சுவர்க்கற்களின் உற்பத்தியோ இப்போது நின்றுவிட்டது. 

இன்று ஒரு கல்லின் மதிப்பு $400 வெள்ளிவரை இருக்கக்கூடும் என்ற கிஷன், வருங்காலத்தில் தமது அறையை இவற்றைக் கொண்டு அலங்கரிக்கும் விருப்பமும் கொண்டுள்ளார்.