பெனின்சுலா பிளாசாவின் நான்காவது மாடியில் ஓரமாய் ஒளிந்துள்ளது ஓர் இசைத்தட்டுப் புதையல். ஏறத்தாழ 40,000 இசைத்தட்டுகள் ‘ஃபார் தி ரெகார்ட்’ எனும் இக்கடையில் உள்ளன. இவை ஏறத்தாழ 50 ஆண்டுகளாக 73 வயது திரு அழகிரிசாமி சொந்தமாகத் திரட்டியவை. இவை அனைத்துமே இசைக்குழுக்கள் வெளியிட்ட முதல் பிரதிகளும் அசல் இசைத்தட்டுகளும் ஆகும்.
‘தி பீட்டல்ஸ்’ எனும் பிரபல ஆங்கில இசைக்குழுவின் பாடல்களை முதன்முறையாகக் கேட்டபோது மெய்ம்மறந்து போனார் திரு அழகிரிசாமி. அன்றுமுதல் அவர் எப்போதும் இசையுடன் ஐக்கியமாகிவிட்டார்.
‘வைனைல்’ எனப்படும் இசைத்தட்டுகள் புதிதாக இனி வெளியிடப்படுவதில்லை. இவை மின்னிசை, டிவிடி ஆகியவை வருவதற்கு முன்னர் வந்தவை. இந்த இசைத்தட்டுக்களைப் பெரியதொரு ‘கிராமஃபோன்’ மேசையில் வைத்துத்தான் கேட்கமுடியும்.
இசைத்தட்டுகளின் பிரபலம் 1990களில் இசைவட்டின் வருகையால் குறைந்தது. $10க்கும் குறைவாக இசைத்தட்டுகள் பல அச்சமயத்தில் விற்பனையாயின. இப்போதோ வரலாறும் மரபுடைமையும் பேசும் இவை ஆயிரக்கணக்கான வெள்ளிக்கு விலைபோகின்றன.
வேலைக்குச் சென்று சேமிக்கும் பணத்தில் சொந்த இசைத்தட்டுக்களை வாங்க வேண்டும் என்று கனவு கண்டார் திரு அழகிரிசாமி. 1970இல் இக்கனவு ஈடேறியது. பின்னர் ஆண்டுதோறும் இவர் ஐரோப்பாவில் நடக்கும் இசைத்தட்டுச் சந்தைகளுக்குச் சென்று அசல் இசைத்தட்டுகளை வாங்குவார்.
ராணுவ வீரராக பணியாற்றியவர் திரு அழகிரிசாமி. தமது வருமானத்தைச் சேமித்து, இவர் மாதந்தோறும் இசைத்தட்டுக்களை வாங்கிச் சேகரிக்கத் தொடங்கினார். மன உளைச்சல் ஏற்படும்போதெல்லாம் அந்த இசைத்தட்டுக்களை கிராமஃபோனில் பொருத்திப் பக்கத்தில் அமர்ந்து கேட்பது இவரின் வழக்கமானது.
“தற்போதைய மின்னிலக்க இசையை இசைத்தட்டோடு ஒப்பிடக்கூட முடியாது. மின்னிலக்க இசை புகைப்படம் என்றால் இசைத்தட்டு ஓர் ஓவியம். அதில் உயிருண்டு. ஆழமான, மனத்தைக் கட்டிப்போடும் இசையை இசைத்தட்டுகளில் மட்டுமே கேட்டு உணர முடியும்,” என்றார் திரு அழகிரிசாமி.
2011இல் திரு அழகிரிசாமியின் இசைத்தட்டுக் கடை உதயமானது. ஈ-பே தளத்தில் முதலில் விற்கத் தொடங்கி ஓய்வுக்காலத் தொழிலாக பெனின்சுலா பிளாசாவில் சொந்தத் தொழிலைத் தொடங்கினார். சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினரும் ஆர்வம் கொண்ட இளையர்களும் இவரை அதிகம் நாடுகின்றனர்.
ஆனால், திரு அழகிரிசாமி எளிதில் யாரிடமும் இசைத்தட்டுக்களை விற்றுவிடுவதில்லை.
“உண்மையில் இசை ஆர்வமுள்ளோர் வந்துகேட்கும்போது அவர்களுடன் பிணைப்பு ஏற்படுகிறது. இசைத்தட்டுக்கள் ஒருவித வளம் என்று அறிந்திருப்பவர்களிடம் மட்டுமே நான் விற்கப் பார்க்கிறேன்,” என்றார் அவர்.

