இசையால் உலகைக் கவர விரும்பும் நிரஞ்சன்

இசையால் உலகைக் கவர விரும்பும் நிரஞ்சன்

2 mins read
79ee4f7d-d6c3-48d4-a1eb-ea6769762b11
- Niranjan

புல்லாங்குழல், நிரஞ்சன் பாண்டியனின் உற்ற நண்பன். ஐந்து வயதிலிருந்தே சிங்கப்பூரில் புல்லாங்குழல் இசைக்கக் கற்று வந்தார் இவர். தொடர் பயிற்சியின்மூலம் நிரஞ்சனின் இசை ஆர்வம் அவரின் பலமாக மாறியது. இசையில் புதுமைகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுந்தது.  இந்திய வகைப் புல்லாங்குழலோடு, மேற்கத்திய புல்லாங்குழலையும் எவ்வாறு வாசிப்பது எனக் கற்றுக்கொண்டார் நிரஞ்சன். இசையில் நிரஞ்சன் சிகரம் தொடவேண்டும் என எண்ணிய அவரது தந்தை நிரஞ்சனைத் தொடர்ந்து ஊக்குவித்தார். 

நிரஞ்சன் மற்ற இசைக்கருவிகளுக்கு அழகு சேர்க்கும் சக்திவாய்ந்த இசைக்கருவி, புல்லாங்குழல் எனக் கற்றுக்கொண்டார்.. பல மேடைகளில் பல்வேறு கலைஞர்களுடன் அவர் புல்லாங்குழல் வாசித்த அனுபவங்கள் அவரது ஆர்வத்தை வெகுவாகக் கூட்டியது. 

தேசிய கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளத்தை 2019ஆம் ஆண்டில் பெற்ற நிரஞ்சன், அண்மையில் லசால் பள்ளியில் ‘ஜேஸ்’ இசையில் தம் பட்டப்படிப்பை முடித்திருந்தார். கர்நாடக இசையில் மட்டும் திறன்வாய்ந்த கலைஞராக மற்றவர்கள் தம்மைப் பார்க்காமல், பலவிதமான இசை வகைகளை அழகாகக் கலவை செய்யும் கலைஞராகப் பார்க்க வேண்டுமென விரும்புகிறார்.  “ஒரு செய்தியாளர் ஒரு நிகழ்வைக் கோவையாகக் கோத்து அதைச் சுவாரசியமாக எழுதுகிறார். அதைப்போல என்னுடைய இசைப் படைப்புகள் மனிதர்களின் கதைகளைக் கோத்து அவை மக்கள் உள்ளத்தைத் தொடவேண்டும்,” என்றார் 29 வயது நிரஞ்சன். 

நிரஞ்சனின் இசைப் பயணத்தில் பல சவால்கள் இருந்த சமயத்திலும், தம்மால் சாதிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். இளம் பருவத்தில் தமது அடையாளம் என்னவென்று அறியாமல் இருந்தது நிரஞ்சனுக்கு வருத்தம் அளித்தது. ஆனால், இப்படி இசைவழிக் கதைசொல்வதே அவரின் அடையாளமாகிவிட்டது அவருக்கு பெருமகிழ்ச்சி தந்தது. தமது ஆர்வத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் நிரஞ்சன் ‘பிரம்மாஸ்திரா’ எனும் இசைக்குழுவை ஆரம்பித்தார். இந்த இசைக்குழு பல்வேறு இசை விழாக்களில் கலந்துகொண்டு மக்களின் மனத்தைக் கவர்ந்தது. அது மட்டுமன்றி, தம் குழுவினருடன் இளையர்களின் ரசனையைத் தூண்டும் பல சொந்தப் படைப்புகளையும் நிரஞ்சன் வழங்கியுள்ளார். 

உள்ளூர்ப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வருபவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறார் இவர். அவ்விதத்தில் இவர் அஜீஸ் அசோக், ஹரிசரண் போன்ற இந்திய பாடகர்களுடன் இணையம்வழியும் கைத்தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு, இசையமைத்து, சில இதமான பாடல்களை வழங்கியுள்ளார்.