இக்காலத்தில் பலரும் வாழ்க்கை முழுவதும் நிரந்தர வேலையை தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அவர்களின் மத்தியில் 15 ஆண்டுகளுக்குக் கணினி மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அலக்ஸாண்டர் பாபு தமது 39 ஆவது வயதில் முழு நேர நகைச்சுவையாளரானார். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தந்துள்ளார் அலக்ஸாண்டர்.
சிறு வயதிலிருந்தே நகைச்சுவையை மிகவும் விரும்பிய அலக்ஸாண்டருக்குப் பத்தாம் வகுப்புவரை வீட்டில் தொலைக்காட்சி இல்லை. தமக்குப் பிடித்த இந்திய நகைச்சுவைக் கலைஞர்களான எஸ் வி சேகர், விவேக் ஆகியோரின் நகைச்சுவைகளை ‘ஆடியோ கேசட்டுகளின்’ மூலம் கேட்டு மகிழ்வார்.
அவ்வப்போது திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களையும் அலக்ஸாண்டர் பார்த்து வந்தார். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் தம்மை அதிகம் கவர்ந்ததாகக் கூறினார் அவர். மேலும், விவேக், வடிவேலு முதலிய திறமையான நகைச்சுவைப் பிரபலங்களின் நடிப்புத் திறனையும் அவர் இப்போதும் கண்டு ரசிப்பார்.
இதனால் சிறுவயதிலிருந்தே நடிப்பு, இசை, நகைச்சுவை ஆகிய மூன்று அம்சங்களிலும் அதீத நாட்டம் கொண்டிருந்தார் அலக்ஸாண்டர். இவை அனைத்தையும் தனிக்குரல் நகைச்சுவையின் மூலம் ஒரே மேடையில் படைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் முடிவு செய்தார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அலக்ஸாண்டர் தமது நகைச்சுவைக் கலையைப் பல இன மக்களிடம் கொண்டு சேர்க்க ஆங்கிலமொழி கற்றுக்கொண்டார். ‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ அனைத்துலக அமைப்பில் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி மேற்கொண்டார். எவ்வாறு பொது இடங்களில் பேசவேண்டும், மக்களைக் கவரவேண்டும் எனப் பல்வகை திறன்களை அங்கு அவர் கற்றுத்தேர்ந்தார்.
அதற்கிடையில் வாரந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு பொது இடங்களில் தமது நகைச்சுவை அங்கங்களைப் அலக்ஸாண்டர் படைத்து வந்தார். மெல்ல மக்களின் மனத்தில் இடம்பிடித்து அயல்நாடுகளிலும் பிரபலமானார். குறிப்பாக, சமூக ஊடகத் தளங்களில் அவரின் நகைச்சுவைப் படைப்புகள் அதிகம் பகிரப்பட்டன.
தமக்கெனத் தனிப்பட்ட பாணி ஒன்றினை அமைத்துக்கொண்டார் அலக்ஸாண்டர். தவில், ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளை அவர் வாசிப்பதையும், நகைச்சுவையாக அவர் பாடுவதையும், மனத்தைப் புண்படுத்தாத வகையில் கேலி செய்வதையும் மக்கள் ரசித்தனர்.
நகைச்சுவையைப் பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி, சமூக நலனுக்காகப் பயன்படுத்த அலக்ஸாண்டர் எண்ணியதுண்டு. தமது படைப்புகளில் அன்றாடம் பல்வேறு மக்கள் எதிர்நோக்கும் சவால்களையும் அவர் இடையிடையே சேர்ப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

