ஒருவேளை இப்போதே தங்களின் பணியை இழந்துவிட்டால், சிங்கப்பூரர்கள் பலர் பெரிதும் சிரமப்படுவர் என்பது தெரிய வந்துள்ளது. பணி நீக்கத்திற்குப் பிறகு தங்களின் தற்போதைய வாழ்க்கைமுறையைப் பலரால் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது. ஆறு மாதங்களுக்குப் பிறகும் அத்தகைய வாழ்க்கைமுறையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு நிதி சேமிப்பு தேவை. போதுமான நிதி சேமிப்போ தற்போது சிங்கப்பூரர்கள் பலரிடம் இல்லை.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் பலரின் நிதிச்சூழல் பாதிக்கப்பட்டது. வயது வாரியாக வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அளவிற்கு சிங்கப்பூரர்களின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளது என கண்டறிய ஓசிபிசி வங்கி ஆய்வு ஒன்றினை நடத்தியது.
வேலை செய்யும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். இந்தப் பிரிவில் மூவரில் இருவருக்கு, அடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகும் தங்களின் வழக்கமான வாழ்க்கைமுறையைத் தொடர்வதற்கு போதிய சேமிப்பில்லை என்று இந்த ஆய்வு கண்டறிந்தது.
ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தங்கள் சேமிப்பின் பெரும்பகுதி செலவாகிவிட்டது எனத் தெரிவித்தனர். ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துவிட்டது என்றும் தெரிவித்தனர். மூவரில் ஒருவர் தங்களின் சேமிப்பு 20 விழுக்காடுவரை குறைந்துள்ளது என்று கூறினார்.
இன்னொரு 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பை நல்ல முறையில் கட்டிக்காத்து வருவதாகப் பகிர்ந்துகொண்டனர். பங்கேற்றவர்களில் 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது என்றும் கூறினர். எஞ்சியுள்ள ஐந்து விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு முன்பைவிட 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றனர்.
தங்கள் ஓய்வுகாலத் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பலர் கருத்துத் தெரிவித்தனர். பணவீக்கம், வேலைநீக்கம் ஆகியவை கொரோனா காலத்தில் தலைதூக்கின. இதனால் பலர் சேமிப்புகளைப் பெரிதும் நம்பி இருந்த போக்குப் பரவலாக இருந்தது.
ஆய்வில் பங்கேற்ற 40 முதல் 54 வயது வரை உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் தங்கள் ஓய்வுகாலச் சேமிப்பைக் குறைத்துகொண்டனர். நிதி திட்டங்களில் சேர்ந்திருக்கும் 20களில் உள்ளோரில் 23 விழுக்காட்டினர் தங்கள் ஓய்வுகாலத்துக்காக அதிக தொகையை ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.

