அங் மோ கியோவில் புதிய நிபுணத்துவ சிகிச்சை நிலையம்

அங் மோ கியோவில் புதிய நிபுணத்துவ சிகிச்சை நிலையம்

2 mins read

டான் டோக் செங் மருத்துவமனை அங் மோ கியோவில் புதிய நிபுணத்துவ மருத்துவ நிலையத்தைத் திறந்துள்ளது. அதன் வழி அங்குள்ள குடியிருப்பாளர்கள், தங்களது வட்டாரத்திலேயே நிபுணத்துவ மருத்துவச் சிகிச்சைகளைப் பெறவுள்ளனர்.

அங் மோ கியோ அவென்யூ எட்டில் புதிய நிலையம் அமைந்துள்ளது.

மருத்துவ சிகிச்சையை மையாகக் கொள்ளாமல், வரும் முன் காக்கும் சிகிச்சைமுறையில் புதிய நிலையம் கவனம் செலுத்தும்.

அதனால் நோயாளிகளின் உடல்நலனைப் பேணுவதில் பலதுறை மருந்தகங்களையும் பொது மருத்துவர்களையும் புதிய நிலையம் இன்னும் நெருக்கமாக ஈடுபடுத்தும்.

பிரதமர் லீ சியன் லூங், வெள்ளிக்கிழமை (மார்ச் 18) அன்று அங் மோ கியோ நிபுணத்துவ மருத்துவ நிலையத்தைத் திறந்து வைத்தார்.

முன்னதாக அங் மோ கியோவில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு கண்பார்வை மங்கினால் அவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்.

பரிசோதனைகள், சிகிச்சைகள், மருத்துவ கவனிப்பு ஆகியவற்றுக்கு அவர் அங்கு செய்ய வேண்டி இருக்கும்.

"ஆனால் அவர் இப்போது தமது வட்டாரத்திலேயே சிகிச்சை, அறுவை சிகிச்சை, அதற்கு பிந்தைய மருத்துவ ஆலோசனை ஆகியவற்றைப் பெற முடியும்," என்று பிரதமர் கூறினார்.

-

இரைப்பை, பெருங்குடல் ஆகியவற்றுள்ளே நோக்கும் பரிசோதனைகள், எலும்பு தசை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கும் இனி நொவீனா செல்லத் தேவையில்லை.

அங் மோ கியோ நிலையத்திலேயே அவற்றைப் பெற முடியும். டான் டோக் செங் மருத்துவமனை ஊழியர்கள் இந்த நிலையத்தில் பணியாற்றுவார்கள்.

மேலும், நீரிழிவு நோய், நிபுணத்துவக் கண் சிகிச்சை, காதுகேளாமை ஆகியவற்றுக்கான தனது மருந்தகங்களை மறுவடிவமைப்பு செய்துள்ளதாகவும் டான் டோக் செங் மருத்துவமனை கூறியது.

எளிதில் பெறக்கூடிய, நீலையான வகையிலும் அங் மோ கியோ நிலையத்தில் வழங்குவதற்கு ஏற்ற வகையிலும் அவை மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியது.