சிங்கப்பூரின் ஆகப் பெரிய நேரடி இந்திய இசை நிகழ்ச்சியாக அமைய இருக்கின்றது, தமிழ்த் திரையிசைக் கலைஞர் அனிருத்தின் எதிர்வரும் இசை நிகழ்ச்சி.
அவரது முதல் 360 கோண மேடை நிகழ்வாக அமையும் இந்த இசை நிகழ்ச்சியை மொத்தம் 12,000 பேர் நேரில் கண்டு மகிழ இருக்கின்றனர்.
தமிழ்த் திரையிசைத் துறையில் தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அனிருத் மேற்கொண்டுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம்' உலகப் பயணத்தையொட்டி அவரது சிங்கப்பூர் வருகை அமைகிறது.
2019ஆம் ஆண்டிற்குப் பின் மீண்டும் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி படைக்கவிருக்கும் அனிருத்தை நிறைந்த அரங்கம் வரவேற்க இருப்பதாக தெரிவித்துள்ளது, நிகழ்வு ஏற்பாட்டாளரான மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சி சிங்கப்பூருக்கு மட்டுமன்றி, அனிருத்தின் தென்கிழக்காசிய இசை நிகழ்ச்சிகளில் ஆகப் பெரியதாகவும் அமைகிறது. பிரபல பாடகர்களும் இசைக் கலைஞர்களும் அனிருத்துடன் சிங்கப்பூர் உட்புற அரங்கத்தின் மேடையில் இணையவிருக்கின்றனர்.
'அரபிக் குத்து', 'செல்லம்மா' ஆகிய பிரபல பாடல்களுக்குக் குரல் கொடுத்த ஜோனிதா காந்தியின் வருகையையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். உலகளவில் நேரடி இசை நிகழ்ச்சிகள் மீண்டெழுந்து வரும் நிலையில், வெளிநாட்டினரும் எதிர்வரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு பார்த்திபன் முருகைய்யன், அனிருத்தின் இசை நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் ஏறத்தாழ 25% வெளிநாட்டிலிருந்து வருவோர் என குறிப்பிட்டார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து முதலிய நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்ட அரை மணி நேரத்திலேயே 8,500க்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகின.
அண்மைய காலத்தில் மிக பிரபலமடைந்துள்ள, பெரியளவிலான, ஆங்கில, கொரிய இசை நிகழ்ச்சிகளுக்கு நிகரான வரவேற்பை இதுபெற்றுள்ளதாகவும் திரு பார்த்திபன் தெரிவித்தார்.