சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் விதமாக மரங்கள் நடப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமையன்று (7 மே) மக்கள் செயல் கட்சி இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வைத் தொடங்கி வைத்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், முதல் மரத்தை நட்டார்.
ஜாலான் புசார் குழுத்தொகுதியைச் சேர்ந்த 100 இளம் குடும்பங்கள் செயின்ட் ஜார்ஜ்ஸ் லேன் சாலையை ஒட்டிய பசுமை இடங்களில் முதல் 100 மரங்களை நடுவதற்குக் கைகோத்தனர்.
திரு வோங்குடன் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசஃபின் டியோ, ஹெங் சீ ஹாவ், டெனிஸ் புவா, வான் ரிஸால் ஆகியோரும் கலந்துகொண்டு மரங்களை நடும் பணியில் ஈடுபட்டனர்.
"பசுமை நிறைந்த நாடாக சிங்கப்பூர் உருமாற வேண்டும் என்பதற்காக திரு லீ குவான் இயூ மேற்கொண்ட பல முயற்சிகளில், 1963ஆம் ஆண்டில் தொடங்கிய மரம் நடும் நடவடிக்கையும் ஒன்று. சிங்கப்பூரர்களாகிய நாம் வருங்காலத்தில் தொடர்ந்து நாட்டை பசுமையாகவும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாகவும் வைத்திருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார்.
"அதை மெய்ப்பிக்கும் வகையில் நாம் தொடர்ந்து பசுமை முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்," என்று நிதி அமைச்சருமான திரு வோங் கூறினார்.
அந்த வட்டாரக் குடியிருப்பாளரான 41 வயது திரு மதிவாணன் திருஞானசம்பந்தம் தனது நான்கு வயது மகன் நிலன் மதிவாணனை மரம் நடுவதற்கு அழைத்து வந்திருந்தார்.
காப்பீட்டுத் துறையில் பணிபுரியும் அவர், "முதல் முறையாக என் மகன் மரம் நடும் நடவடிக்கையில் ஈடுபடுகிறான். அதிக ஆர்வத்தால் அவன் காலை ஏழு மணிக்கே எழுந்து உற்சாகமாகக் காணப்பட்டான்.
"இதுபோன்ற சமூக நடவடிக்கைகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துவதால் இயற்கை மீதான நாட்டத்தை நாம் இளம் வயதிலேயே அவர்களிடம் விதைக்க முடியும்," என்றார்.
மக்கள் செயல் கட்சி நிர்வகிக்கும் 15 நகர மன்றங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து தீவு முழுவதும் 10,000 மரங்கள் வரும் மாதங்களில் நடப்படவுள்ளன.
மரம் நடும் நற்பணியில் பங்குகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களின் குடியிருப்புப் பேட்டைக்கு உட்பட்ட மக்கள் செயல் கட்சி நகர மன்றத்தை நாடலாம்.