அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியின் கழிவறையில் ஐந்து வயது சிறுமி தனது கைகளைக் கழுவிவிட்டு அவற்றைக் காயவைக்கும்போது, விரல் சிக்கித் துண்டிக்கப்பட்டது.
திங்கட்கிழமை (டிசம்பர் 6) இரவு இந்தச் சம்பவம் நடந்தது.
அப்போது அச்சிறுமி, தம்முடைய இல்லப் பணிப்பெண் மற்றும் ஒன்பது வயதிலான இரட்டை சகோதரிகளுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
கழிவறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டபோது சிறுமியின் தந்தைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.
மகளுக்கு ஒரு விரல் போய்விட்டது என்று பணிப்பெண் அவரிடம் வந்து சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் கழிவறைக்குள் ஓடினர்.
அங்கு காரா என்ற அந்தச் சிறுமி, தமது கையைப் பிடித்தவாறு அலறிக்கொண்டிருந்தார்.
இதுவரை சிறுமிக்கு இரு முறை அறுவை சிகிச்சை நடந்துவிட்டதாக தந்தை திரு சியா தெரிவித்தார்.
இதனால் இடது ஆள்காட்டி விரல் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் தட்டையாக உள்ளது.
விரலில் கட்டுடன் சிறுமி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வலியைப் போக்க மருந்தும் உட்கொண்டு வருகிறார்.
மகளின் மனநலன் குறித்து தற்போது அவரின் பெற்றோர் கவலைப்படுகின்றனர்.
அடுத்து என்ன செய்வது என்பதை இருவரும் ஆலோசித்து வருகின்றனர்.
"தைரியமாக இருப்பதுபோல் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். அவளது கையைப் பின்னால் மறைத்துக்கொள்கிறாள். நடந்தது அவருக்கு முழுமையாக விளங்கவில்லை," என்றார் திரு சியா.
கழிவறையில் கைகளை உலர்த்தும் சாதனம் இயங்கியபோதும் அதன் காற்றோட்ட மூடியைக் காணவில்லை என்று திரு சியா குறிப்பிட்டார்.
அதனால் சிறுமியின் உடைந்த விரல் பகுதிகளை எடுப்பதற்காக பணியாளர்கள் தங்கள் கைகளால் அதைத் திறக்க வேண்டியிருந்தது திரு சியா கூறினார்.
சாதனம் பொருத்தப்பட்ட பகுதியைத் திறப்பதற்கான சாவியைக் கடைத்தொகுதியின் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவத்தை அடுத்து சாதனத்தை மாற்றிவிட்டதாக கடைத்தொகுதி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

