தன் நண்பருடைய கைத்தொலைபேசியைத் தேடி கண்டுபிடிக்க துப்புரவு நிறுவனம் ஒன்று பட்டபாட்டை விவரித்துள்ளார் சிங்கப்பூரர் ஒருவர். ஷாமேன் சியோங் என்பவர் தன்னுடைய இரு நண்பர்களுடன் ஃபோர்ட் கெனிங்கிற்கு சென்ற ஆகஸ்ட் 13 அன்று திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். திரைப்படம் கிட்டத்தட்ட இரவு 11 மணியளவில் முடிந்தபோது தன் நண்பருடைய கைபேசியை காணவில்லை. இடத்தை சோதனை செய்ததில் பலனில்லை.
தொலைந்துபோனது ஐபோன் என்பதால் ஆப்பிள் செயலி ஒன்றின் வழி கைபேசியைத் தேடினர். அது ஜூரோங் ஆற்றின் அருகே உள்ள ஒரு தொழில்பேட்டையில் இருப்பது தெரியவந்தது. கைபேசியைத் தேட நண்பர்கள் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு சென்றபோதுதான் அது ஒரு குப்பை அகற்றும் நிறுவனம் என்று அறிந்துகொண்டனர். குப்பை மேட்டில்தான் கைபேசி இருக்கவேண்டும் என்று எண்ணியவர்கள், ஃபோர்ட் கெனிங் பகுதியில் குப்பை அகற்ற பயன்படுத்தப்பட்ட நிறுவனத்தின் தகவல்களை பெற்றன.
நிறுவனத்தின் முதலாளியை அணுகியபோது, ஷாமேனுக்கும் அவரது நண்பர்களுக்கும் உதவ அவர் ஒப்புக்கொண்டார். தேடும் பணியில் தனது நான்கு ஊழியர்களை அமர்த்தினார். ஊழியர்கள் குப்பையை தொண்ட தொடங்கினர்.
கிட்டதட்ட 20 நிமிடங்கள் கழித்து கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.
நிறுவனத்தின் முதலாளிக்கும் ஊழியர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொண்ட ஷாமேன் ஒரு முக்கிய கருத்தையும் பகிர்ந்துகொண்டார்.
"அனைவரிடமும் நல்லதையே பாருங்கள். வெளிநாட்டு ஊழியர்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துங்கள்," என்று அவர் தனது சமூக பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.

