பூன் கெங்கில் பதின்ம வயது இளையர்கள் சிலர் அடிதடியில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த அடிதடி எப்போது நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், அந்த இரண்டு நிமிட காணொளி ஜனவரி 13ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில், இளையர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிகிறது. காலாங் சமூக மன்றத்திற்கு அருகில் இருக்கும் கூடைப்பந்துத் திடலில் சண்டை மூண்டது.
குறைந்தது ஓர் இளையரேனும் பள்ளிச் சீருடையில் இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து கருத்துரைக்க கல்வி அமைச்சை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
இந்தக் காணொளியில், இளையர்கள் இருவர் ஒருவர் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டபின் சண்டை முடிவுக்கு வருவதைக் காண முடிகிறது. அவர்களைச் சுற்றியிருந்த ஏறக்குறைய 12 இளையர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், உதை விட்டவரை மூன்றாமவர் மடக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து மீண்டும் அடிதடி ஏற்பட்டது. இம்முறை அதில் மேலும் பலர் ஈடுபட்டனர்.
இளையர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 16) பதிலளித்த காவல்துறை, இந்தச் சண்டை குறித்து தன்னிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுகுறித்து தான் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.

