மின்னிலக்க சாதனங்களில் 71 வயது திரு காசவேலு கோவிந்தராஜுவுக்கு அதிக அனுபவம் இல்லை என்றாலும் அவற்றைப் பற்றி மேலும் அறியவும் மின்னியல் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அவருக்கு ஆர்வம் இருந்தது.
அந்நாளில் அப்பர் தாம்சன் ரோட்டில் ராமூஸ் கறி என்ற உணவகத்தை நிர்வகித்தனால் அவரை ராமூஸ் கறி ராமு என்று பலர் அழைத்தனர். பிறகு, உணவுத் துறையைவிட்டு மோட்டார் சைக்கிள் வாகனத்தைக் கொண்டு அருகில் உள்ள வட்டார நாடுகளுக்கு தனித்தே பிரயாணம் செய்தார். சிங்கப்பூரின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த 2015ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தேசியப் பாடல் காணொளி ஒன்றிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
அண்மையில் நவீன சாம்சுங் திறன்பேசி ஒன்றை வாங்கிய பிறகு அதனை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாமல் இருந்தது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவரது நடைப்பயிற்சி தோழர்களும், காப்பிக் கடை நண்பர்களும் அளித்த அறிவுரையின்படி, அருகில் உள்ள பாசிர் ரிஸ் ஈஸ்ட் சமூக மன்றத்தில் மின்னிலக்க வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினார் அவர். உடனே பலனும் கிட்டியது.
''இந்த நவீன காலக்கட்டத்தில் திறன்பேசிகள் தரக்கூடிய அறிவுசார்ந்த பயன்பாடுகளை கற்றுக்கொள்வதன் அவசியமே எனக்குள் அவற்றை அறிந்துகொள்ள பயிற்சிபெற வேண்டும் என்ற ஆர்வத்தை கூட்டியது.
''அதற்கு முன்பே எனக்கு யுடியூப், பேஸ்புக் என்ற முகநூல், வாட்ஆப், இணைய வங்கிச் செயல்பாடு போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும். எனக்கு வழங்கப்பட்ட பயிற்சி மின் கட்டண முறைகள், வீடியோ அழைப்பு என்ற நேரடியாக காணொளி வழி தொலைபேசியை பயன்படுத்துதல், பிளே ஸ்டோரில் செயலிகளை பதிவிறக்கம் செய்தல், கியு ஆர் குறியீட்டு வருடல் முறை, படங்களை சேமித்தல், மருத்துவ செயலியைப் பணன்படுத்தி மருத்துவ சோதனைகளுக்கு முன்பதிவு செய்தல் போன்ற பலதரப்பட்ட விவரங்கள் அறிய உறுதுணையாக அமைந்து.'' என்றார் திரு காசவேலு.
தமது 65 வயதில் மோட்டார் சைக்கிளில் அவர் வடக்கு, தெற்கு லாவோஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார். சுமார் முப்பது நாட்களில் லாவோஸ் நகருக்கு தனித்து பயணித்து சிங்கப்பூர் திரும்பியுள்ளார். லாவோஸில் அவர் அறப்பணிகளுக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவருக்கு பைக்கர் ராமு என்ற பெயரும் உள்ளது. அவரது அனுபவங்கள் பற்றிய காணொளிகள் யுடியூப் செயலியிலும், கூகுள் இணையத் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
''வயதுவரம்பின்றி, அறிவை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் தயக்கமின்றி, புதிய திறன்களை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். சமூக மன்றங்கள் வழங்கும் இலவச மின்னிலக்க பயிற்சிகளில் முதியோர்கள் கலந்துகொண்டு திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் இன்றியமையாதது.''
உலகத்துடன் இணைக்கும் மின்னிலக்கத் திறன்கள் திரு நடராஜா தங்கவேலு 73, வேலை ஓய்வு பெற்றவர். சுமார் 35 வருடங்களாக அலுவலக நிர்வாகப் பணியில் இருந்துள்ளார். தாம் பொங்கோல் தொகுதியில் உள்ள பசிஃபிக் நடவடிக்கை நிலையத்தின் உறுப்பினர் என்பதால் அவருக்கு அதனால் அங்கு நடத்தப்படும் பல நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பரீட்சயம். அவற்றில் ஒன்றுதான் கைத்தொலைபேசி மின்னிலக்க திறன்களை அறிந்துகொள்ளும் இலவச பயிற்சி வகுப்புகள்.
''அங்கு வேறு வகுப்புகளிலும் நான் கலந்துகொள்வதுண்டு. சில நேரங்களில் அங்கு மருத்துவம் உடற்பயிற்சி சம்பந்தமான நிகழ்வுகளும் நடக்கும். ஆகவே அங்கு செல்லும் எனக்கு பல திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். சமூக நிலையத்தின் பணியாற்றும் அதிகாரிகள், மின்னிலக்க உதவியாளர்கள் மிகவும் சிறந்த சேவையை வழங்குகின்றனர். சட்ட மாற்றங்கள், மருத்துவ விவரங்கள், கொவிட் தொற்று பற்றிய விழிப்புணர்வுகள், என பலவற்றை மக்களுக்கு எடுத்து விளக்குகின்றனர்.
''உடற்பயிற்சி பற்றிய பல முக்கிய விவரங்களை நான் அறிந்துகொள்ள முடிகின்றது. சில மூத்த குடிமக்கள், வீவக குடியிருப்பாளர்கள் இதுபோன்ற பயிற்சிகளில் என்னுடன் கலந்துகொள்வர். மின்னியல் வகுப்புகள் முதியோர்கள் பல நண்பர்களை சந்திக்கவும் உறவாடவும் உதவுகின்றது.
''முதலில் யூடியூப் காணொளிகளை நான் இணையத்தில் கைத்தொலைபேசியில் பார்ப்பேன். எனது கைத்தொலைபேசி நவீன ரகத்தைச் சார்ந்தது. அதன் பயன்பாடு எனக்கு அதிகம் புரியவில்லை. இப்பொழுது வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என்ற முகநூல் போன்ற செயலிகளை பயன்படுத்தப் பழகிவருகிறேன். புகைப்படங்களை எப்படி மற்றொருவருக்கு அனுப்புவது என்பதை கற்று வருகிறேன்.
''எனக்கு மேலும் பயிற்சிகள் தேவைப்படுகின்றது. முதியோர்களின் அறிவாற்றல் நவீன விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில் சற்று தாமதமடைகின்றது. இருப்பினும் முயற்சி செய்தால் நிச்சயம் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து பயிற்சிகளுக்கு செல்கின்றேன். தொலைபேசி அழைப்புகளை செய்வது, வரும் அழைப்புகளை ஏற்பது, குறுஞ்செய்திகளையும் படங்களையும் எப்படி அனுப்புவது, பெறு வது ஆகியனவற்றை தற்பொழுது பயின்று பயிற்சி செய்து வருகிறேன்,'' என்றார் திரு நடராஜா.
''கைத்தொலைபேசியின் மின்னிலக்க செயலிகள் மிகவும் பயனுள்ளவையாகும். எதிர்காலத்தில அதிக பயிற்சிகளுக்குப் பிறகு, மின்னியல் வங்கிப் பரிவர்த்தனை, மின்னியல் கட்டண முறைகள் போன்ற கைத்தொலைபேசியில் செய்யக்கூடிய பலவற்றை கற்றறிய விரும்புகிறேன்,'' என்றார் தரு நடராஜா.
வாருங்கள் கற்கலாம்
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மெய்நிகர் மின்னிலக்கக் கூட்டரங்கில் பங்கெடுத்து கற்றுக் கொள்ளுங்கள். இணையம்வழியான இந்தக் கூட்டரங்குத் தொடரில் உங்கள் சுகாதாரத்தையும் நலனையும் மேம்படுத்தவும், அரசாங்கச் சேவைகளை அணுகவும், இணையம்வழி பொருள் வாங்கவும், இன்னும் பலவற்றைச் செய்யவும் துணைபுரியும் பலதரப்பட்ட மின்னிலக்கத் திறன்களும் கருவிகளும் கற்பிக்கப்படும். இந்த இலவச இணையக் கூட்டரங்குகளில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் பிற்பகல் 3 மணியிலிருந்து 3.30 மணி வரை சூம் (Zoom) வழியாகக் கலந்து கொள்ளுங்கள்.
மூத்தோர்களே, உங்களுக்கு அருகிலிருக்கும் சிங்கப்பூர் மின்னிலக்க சமூக மையத்தில் மின்னிலக்கமயமாகத் தொடங்குங்கள். மெய்நிகர் மின்னிலக்கக் கூட்டரங்கில் பங்கெடுக்க இன்றே go.gov.sg/dp இணையப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள்

