கோழிச் சோறு கடைகளில் அலைமோதும் கூட்டம்

கோழிச் சோறு கடைகளில் அலைமோதும் கூட்டம்

1 mins read

மலேசியாவின் கோழிகளைத் தற்காலிகமாக ஏற்றுமதி செய்யும் தடை நாளை மறுநாள் (ஜூன் 1) நடப்புக்கு வரவுள்ளது. இதனால் பெரிதளவில் பாதிக்கப்படப்போவது கோழிச் சோறு (சிக்கின் ரைஸ்) விற்பவர்கள்.

சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு எது என்றால் கேட்டால், கோழிச் சோறு தான் முதலிடத்தைப் பிடிக்கும்.

கமகமக்கும் சோறு, வேகவைத்த கோழி, மிளகாய் சாந்து. இது அனைத்தும் கலந்த கோழிச் சோறு உள்ளூரில் மட்டுமல்ல அனைத்துலக அளவில் பிரபலம் பெற்றுள்ளது.

குறிப்பாக மேக்ஸ்வெல் சந்தையில் உள்ள டியன் டியன் ஹய்னானீஸ் கோழிச் சோறுக்குப் பலரும் அடிமை என்று சொல்லலாம்.

இன்று காலை இந்தக் கடைக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் வரிசை பிடித்துக் காத்திருந்தனர். காலை எட்டு மணிக்கே வாடிக்கையாளர்கள் கடைக்கு வர தொடங்கிவிட்டனர்.

கோழி ஏற்றுமதி தடை நடப்புக்கு வருவதற்கு முன், தங்களுக்குப் பிடித்தமான கோழிச் சோற்றை வாங்க பலர் வந்திருந்தனர்.

-

பொதுவாக வார நாள்களில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என கடைக்காரர் சொன்னார். கடந்த சில நாள்களாக வழக்கத்தைவிட அதிகம் பேர் தமது கடைக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜூன் முதல், புதிய கோழிக்குப் பதிலாக உறைய வைக்கப்பட்ட கோழி சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும். இது ருசியை ஓரளவுக்குப் பாதிக்கும் என வாடிக்கையாளர்கள் கூறினர். அதனால் இப்போதே தங்கள் நாவிற்குப் பழக்கமான ருசியை சுவைத்திடவேண்டும் என்ற ஆசையில் கடைக்கு வந்ததாக பலர் குறிப்பிட்டனர்.