சமூக நலனில் அக்கறை காட்டும் தொண்டூழியர் ககன்

சமூக நலனில் அக்கறை காட்டும் தொண்டூழியர் ககன்

2 mins read

தொண்டூழியப் பணி ஆற்றிவரும் 68 வயதான திரு வெள்ளப்பக்குட்டி ககன், விளையாட்டுத் துறையிலும் தான் வசிக்கும் செம்பவாங் தொகுதியிலும், பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

திரு ககன் 2015ஆம் ஆண்டு முதல் டீம் நிலாவில் தொண்டூழியராக இயங்கி வருகின்றார். உள்ளூர், வெளியூர் விளையாட்டு போட்டிகளில் தொண்டூழியப் பணிகள் செய்வதோடு, 2016ஆம் ஆண்டு முதல் சக்கரநாற்காலி ரக்பி அணியிற்காகத் தொண்டூழியப் பணியாற்றத் தொடங்கினார். சிங்கப்பூர் சக்கரநாற்காலி ரக்பி அணியுடன் ஜகார்த்தாவுக்குப் பயணம் செய்த அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட திரு ககன், அந்த அனுபவம் தன் மனதை உருக்கிய ஒன்றாகும் என்றும், அதன் தாக்கத்தினால்தான் மேன்மேலும் தொண்டூழியம் ஆற்றவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது என்றும் சொன்னார்.

"92 வயதான என் தாயாரை நான் தனியாகப் பராமரித்து வருகிறேன். அதன் பின்னரே, சமூகத்தில் சவால்களை எதிர்நோக்குவோருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. பின்னர், விளையாட்டுத் துறையில் தொண்டூழியராகச் சேவையாற்றிக்கொண்டிருந்தபோது, சிங்கப்பூரின் முதல் சக்கரநாற்காலி ரக்பி அணியுடன் தொண்டூழியராகப் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த விளையாட்டாளர்களின் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, அவற்றைச் சமாளிக்கும் வகை அறிய நான் உழைத்தேன். அவர்களது மனோதிடத்தைப் பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு. அத்தகைய உறுதியைக் கண்டு நானும் பெரிய அளவில் உத்வேகம் அடைந்தேன். விளையாட்டாளர்களுடன் இவ்வகையில் உரையாடி நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஜகார்த்தாவில் கழித்த அந்த ஐந்தாறு தினங்கள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய நினைவுகளை எனக்குத் தந்திருக்கின்றன." என்று நெகிழ்ந்தார் திரு ககன்.

சிங்கப்பூர் சக்கரநாற்காலி ரக்பி அணி உறுப்பினர்களை மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த விளையாட்டாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு திரு ககனுக்கு வாய்த்தது. தாம் சந்தித்த விளையாட்டாளர்கள் அனைவரையும் குடும்பமாகவே கருதி, இன்றும் அவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருக்கின்றார் திரு ககன்.

விளையாட்டு ஆர்வலராக இருக்கும் திரு ககன், விளையாட்டுத் துறையில் அதிகாரிகளாகத் திகழும் தனது நண்பர்களைப் போல் அல்லாமல், தொண்டூழியராக இருக்கவே விரும்பினார்.

-
-