சவாலான சூழலில் உள்ளூர் திறனாளர்களை வளர்த்தும் புத்தாக்கத்தைத் தழுவியும் நிறுவனங்கள் வளர்கின்றன

சவாலான சூழலில் உள்ளூர் திறனாளர்களை வளர்த்தும் புத்தாக்கத்தைத் தழுவியும் நிறுவனங்கள் வளர்கின்றன

6 mins read
Google News Preferred Icon

சவால்களை எதிர்கொள்ள புத்தாக்கச் சிந்தனையும் உருமாற்றமும்

உலக அளவில் பெரும் சவாலை எதிர்நோக்கும் பல துறைகளில் ஒன்று உணவுத்துறை. அரசியல் சூழல், பொருளியல் காரணங்கள், மனிதவள பிரச்சினை என உலகளாவிய நிலைத்தன்மை குன்றிய நிலையில் உணவு, பானத் துறையினர் தத்தளித்துவருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் காமன்வெல்த் கேபிட்டல் நிறுவனத்தைச் சேர்ந்த திறன்மிக்க நிர்வாகிகள் சவால்களை எதிர்கொண்டு மீள்திறனுடன் மிண்ணுகின்றனர்.

உணவு உற்பத்தியைத் தமது முக்கிய பொறுப்பாகப் பார்த்துவரும் 31 வயது ஜோஷுவா ரெனெ, மனிதவளம் சார்ந்த சவால்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறது என்றாலும் தமது நிறுவனம் தானியக்க முறைகளை அரவணைத்து தடைக்கற்களைத் தகர்த்தி வருவதாகத் தெரிவித்தார்.

மீள்திறனுடன் செயல்பட்டு முன்பிருந்த நிலையைவிட இன்னும் சிறப்பாக மேம்பட்டு வரவேண்டும் என்ற கடப்பாடு தமது நிறுவனத்திற்கு இருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், எந்த சவாலையும் அதற்கு ஏற்ப சீரிய முறையில் சிந்தித்து எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அண்மையில் மலேசியா கோழி இறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதித்த நிலையில் தமது நிறுவனத்தின் தேவைகளை எந்த வகையில் எதிர்கொண்டனர் என்பதையும் அவர் பகிர்ந்தார்.

மிகப் பெரிய நிறுவனமாக இருந்தாலும் மாற்றங்களை எப்படி நிறுவனம் முழுதும் செயல்படுத்துகின்றனர் என்ற தகவல்களையும் அவர் பகிர்ந்தார்.

ஒரு கிளையிலோ பிரிவிலோ மட்டும் புத்தாக்க முறைகளை முதலில் செயல்படுத்துவதும் அதன் வெற்றியைத் தொடர்ந்தே மற்ற கிளைகளுக்கு அந்த மாற்றத்தைப் பின்னர் பெரிய அளவில் செயல்பாட்டுக்குப் பரிந்துரை செய்வதும் இவர்களது தந்திரம்.

புத்தாக்கத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த எண்ணும் நேரத்தில் அவர்களது ஊழியர்களுக்கு அதற்குத் தகுந்த பயிற்சியையும் திறன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகுப்புகளையும் நடத்துகின்றனர்.

-

காமன்வெல்த் கேபிட்டல் நிறுவனத்தில் மொத்தம் 1,178 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் முக்கால்வாசி முழுநேர ஊழியர்கள்.

நிறுவனங்கள் உருமாற்றம் பெறுவது தலைமைத்துவத்திலிருந்து செயல்படுத்தப்படும் செயல்முறை அல்ல என்றும் ஊழியர்களிடம் கருத்துகணிப்பிலிருந்து தொடங்கவேண்டும் என்றும் சொன்னார் ஜோஷுவா.

மின்னிலக்கமயமாதல், தானியக்கம், மனித இயந்திரவியல், பசுமைத் துறை போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி உருமாற்றம் அடையும்போது அனைவரையும் உள்ளடக்கிய மாற்றமாக இருப்பதை உறுதி செய்வது அவர்களது எண்ணம்.

உணவுச் சேவைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் பிரையன் ஸ்டேம்ப், மனிதவளம் முக்கிய பிரச்சினையாக இருந்தாலும் மனிதர்களால் செய்யப்படும் எல்லா சேவைகளையும் பணிகளையும் தானியக்கத்தாலோ இயந்திரத்தாலோ செய்யமுடியாது என்றார். அதனால் இந்த சவால் உணவுத் துறைக்கு என்றும் இருக்கும் என்றாலும் அதை எதிர்கொள்ள புத்தாக்க முயற்சிகளைச் சிந்தித்துகொண்டே இருக்கவேண்டும் என்றார்.

விநியோகச் சங்கிலி, தளவாடம் சார்ந்த சவால்கள் ஏராளம் என்று கருத்துரைத்தார் டேனியல் டான்.

தங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் ஒரு திறனில் மட்டுமல்ல பல வேலைகளைச் செய்யக்கூடிய பன்முகத் திறனாளர்களாக உருவெடுக்கச் செய்வது இந்த நிறுவனத்தின் இலக்கு.

அவர்களது நிறுவனத்தில் உள்ள சமையல் பிரிவில் பணியாற்றும் சமையல்காரர்களும் மற்ற கிளைகளின் மேலாளர்களாக ஆன வரலாறு இவர்களிடத்தில் உண்டு.

முந்தைய சிந்தனையைக் கழற்றி வைத்து புதுமையான சிந்தனைக்கு முன்னுரிமைக் கொடுத்து தங்களது மீள்திறன்மிக்க மாற்றத்தைத் தழுவுகின்றனர் காமன்வெல்த் கேபிட்டல் நிறுவனத்தார்.

சமையல் வல்லுநர் விற்பனை செய்வதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்த நிலையில் அவர்களது புதுமையான உணவுப் பொருள்களை வாடிக்கையாளர்களிடம் விற்கும்போது அந்தச் சந்திப்பில் சமையல் வல்லுநரையும் அழைத்துச் சென்ற அனுபவத்தை நிபுணர்கள் பகிர்ந்தனர்.

நற்குணம் படைத்த ஊழியர்களையே தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த முற்படுகின்ற நிறுவனத்தார், திறனுக்கு ஏற்றதுபோல அதிக திறன்மிக்கவர்களை அவரவருக்கு ஏற்ற பணிகளைச் செய்ய ஊக்கமளிக்கின்றனர்.

அரசாங்கம் வழங்கும் மானியத்தின் ஆதரவும் அவர்களுக்குக் கைகொடுக்கும் நிலையில் ஆண்டுதோறும் திறன் வளர்ச்சி, திறன் மறுபயிற்சி தேவைப்படுவோர்க்குத் தக்க பயிற்சி கொடுப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு மீள்திறனை மேம்படுத்தி வருகின்றனர்.

இன்றைய மாற்றம் நாளை பலன் தரும்

-

சிங்கப்பூர் உள்பட உலகளாவிய இடங்களில் தகவல்களை அறிவார்ந்த தரவுகளாக உருமாற்றுவதை முடுக்கிவிடும் நியாபகம், கொள்கலன் தீர்வுகளைப் புத்தாக்கமான முறையில் தயாரிக்கும் உலக முன்னணி நிறுவனமானமாக விளங்குகிறது மைக்ரோன்.

அந்த நிறுவனத்தில் கடந்த 21 ஆண்டுகளாகப் பணியாற்றி இயக்குநராக மிளிர்கிறார் திரு ரங்கநாதன் பத்மநாபன். பொறியாளராகத் தமது பணியைத் தொடங்கிய அவர், படிப்படியாக முன்னேற்றம் அடைந்த மீள்திறன்மிக்க முழு மேம்பாட்டைக் கண்டுள்ளார்.

"புதிய திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதுடன், தவறுகளைத் திருத்துவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. நேர்மையான நிறுவனமாகவும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனமாகவும் இருந்தது இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது," என்றார் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கிவரும் ரங்கநாதன்.

பல ஆண்டுகளாக வெவ்வேறு புதிய பணிகளைச் செய்வதுடன் வெவ்வேறு பிரிவுகளில் தமது ஆர்வத்துக்குத் தகுந்த பணியைச் செய்ய இந்த நிறுவனம் அவருக்கு வாய்ப்பளித்தது.

உதாரணத்திற்கு மைக்ரோன் நிறுவனத்தின் புதிய தைவான் தொழிற்சாலையில் தானியக்க மூத்த மேலாளராக 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு சேவையாற்றியபோது புதிய பணிகளைக் கற்பதை விரும்பி செய்தார். குழுவாக அந்தப் பணிகளைச் செய்வதும் அவருக்குப் பிடித்திருந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக முழுமையாக உற்பத்தி நடவடிக்கைகளை மட்டுமே செய்வதிலிருந்து ஆய்வு, மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிகமான கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது.

உலகின் முதல் 232-அடுக்கு NAND தொழில்நுட்பப் பொருளை மிகப்பெரிய எண்ணிக்கையில் தயாரிக்கத் தொடங்கியிருப்பதாக மைக்ரோன் அறிவித்துள்ளது.

திறன்பேசிகள், தகவல் சேமிக்கும் சாதனம், மின்னிலக்க கேமராக்கள், வாகனங்களுக்கான பொருள்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் முப்பரிமான NAND பொருளைத் தயாரிப்பது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. தொழில்துறையில் முற்போக்கான புத்தாக்கத்தை உருவாக்கி தகவல் சேமிப்புத் தீர்வுகளில் எதிர்பார்க்காத அளவு சிறப்பான சாதனமாகவும் அது உள்ளது.

ஆய்வு, மேம்பாடு, அறிவுசார் உற்பத்தியில் மைக்ரோன் வகிக்கும் தலைமைத்துவமே இந்தப் புதிய தொழில்நுட்பப் புத்தாக்கத்தைத் தழுவ காரணமாக விளங்கியுள்ளன.

உலக அளவில் குறைகடத்தியில் முன்னோடியாக விளங்கிவரும் மைக்ரோன், காலத்திற்கு ஏற்ப தம்மை உருமாற்றி வந்துள்ளது. அத்துடன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்முறைகளைப் பயன்படுத்தி செயல்பாடுகளுக்கும் உற்பத்தி தயாரிப்புகளுக்கும் நன்மை உண்டாக்கும் வண்ணம் உருவெடுத்துள்ளது.

இதே துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் அடைந்த 4ஆம் தொழில்துறை புரட்சி கலங்கரை விளக்கம் என்ற அங்கீகாரத்தை உலக பொருளியல் கருத்தரங்கு அமைப்பின் கட்டமைப்பு வழங்கி வகைப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் முதலாளியாகவும் மைக்ரோன் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதலீடுகளை வைப்பதற்கும் கடப்பாட்டையும் மைக்ரோன் அதிகரித்து, வலுவடைந்துள்ளது.

செயல்பட்டு வந்துள்ள எல்லா நேரங்களிலும் மைக்ரோன் அதன் மீள்திறனை வளர்த்துவந்துள்ளது என்று மட்டுமல்ல, அதன் ஊழியர்களும் அந்தத் திறனைக் கொண்டுள்ளனர்.

பொருள்கள் திட்டமிடல் மேலாளராகப் பணியாற்றும் நூருல்ஹுதா, தமது 28 ஆண்டுகால மைக்ரோன் அனுபவத்தைப் பகிரும்போது, எந்த ஒரு செயலும் செய்ய முடியாது என்பதே இல்லை. எல்லாமே சாத்தியம் என்ற கடப்பாட்டில் பணிபுரிகிறார்.

தமது சிந்தனைகளை அனைவரிடமும் பகிர்ந்து குழுவாக திறன்களை வளர்க்கும் எண்ணத்தை அவர் சுட்டினார்.

ஊழியரணி மேம்பாட்டுப் பிரிவில் பொறியாளரான ஜெஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மைக்ரோனில் வேலைச் செய்கிறார்.

குழு உறுப்பினர்கள் தங்கள் வேலைகளைச் செய்யவும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கவும் தேவையான திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்துவது அவரது பொறுப்பு. மேலும் அதிக திறன்களைப் பெற்று தம்மை வளர்த்துக்கொள்வதன் மூலம் தமது சுய மீள்திறனை மேம்படுத்திக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

செயல்முறை மற்றும் தளவாட பொறியாளரான ஜெர்ரி, தமது எட்டு ஆண்டு அனுபவத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய சூழலை வருணித்தார். உடலில் குறைபாடு இருந்தாலும் அதை எதிர்கொண்டு வெவ்வேறு வாய்ப்புகளையும் பயன்படுத்த முடிந்தது அவருக்கு நன்மை அளித்ததாகத் தெரிவித்தார்.

கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் தலைதூக்கிய காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அனைவருக்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்தார் அவர்.

எவருமே எந்த சவாலையும் தனியே கடக்கத் தேவையில்லை என்பதும் குழுவாக இணைந்து சவால்களைக் கடக்கும் எண்ணம் சக ஊழியர் மத்தியில் இருந்ததை அவர் தெரிவித்தார். அத்துடன், தமது மீள்திறனுக்கு அது உந்துசக்தியாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

இன்றைய சவால்களுக்கு எதிர்காலத்தை உருமாற்றுவோம்

இன்றைய சவால்களையும் நடப்பில் இருக்கும் பிரச்சினைகளையும் தீர்வுகளையும் ஆராய்ந்து செயல்படுத்தும் அதே நேரம், மீள்திறனுடன் செயல்படுவதற்கான தேவையையும் அதனால் விளையும் பலன்களையும் வெளிகொண்டு வருகின்றன சில நிறுவனங்கள். எதிர்கால பொருளியல் மன்றம் கவனம் செலுத்தும் அம்சங்களுள் மீள்திறனை நிலைநாட்டுவதும் ஒன்று. இந்தக் கட்டுரையில் இரு நிறுவனங்கள் மீள்திறனுடன் செயல்பட்ட சூழலையும் அதை வளர்த்து இன்று அதன் பலன்களை அனுபவிப்பதைப் பற்றி பகிர்ந்துள்ளன.