சாங்கி விமான நிலையம், மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் ஆகிய இடங்களிலிருந்து டாக்சியில் பயணம் மேற்கொள்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை 2022ஆம் ஆண்டில் தற்காலிக அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது, ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நிரந்தரமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நிரந்தரமாக்கப்பட்டதும் மாலை 5 மணிக்கும் இரவு 11.59 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சாங்கி விமான நிலையம், சாங்கி விமான நிலையத்தின் சரக்கு மையம், விமான நிலைய காவல் நிலையம், சிங்கப்பூர் விமான நிலைய தளவாடப் பூங்கா ஆகிய இடங்களிலிருந்து டாக்சியில் பயணம் மேற்கொள்வோர் கூடுதலாக $8, மற்ற நேரங்களில் கூடுதலாக $6 செலுத்தும் முறை தொடரும்.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் உள்ள சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி, ரிவர் வான்டர்ஸ், பறவை மகிழ்வனம் ஆகிய இடங்களிலிருந்து பிற்பகல் 1 மணிக்கும் இரவு 11.59 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் டாக்சியில் பயணம் மேற்கொள்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடரும்.
ஆனால் கூடுதல் கட்டணம் $5ஆக உயர்த்தப்படுகிறது. தற்போது அது $3ஆக உள்ளது.
நிரந்தரக் கூடுதல் கட்டணங்கள் குறித்து ஜூன் 24ஆம் தேதியன்று டாக்சி சேவைகளை வழங்கும் நிறுவனங்களான கம்ஃபர்ட்டெல்குரோவும் ஸ்டிரைட்ஸ் பிரிமியரும் அவற்றின் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டன.
டிரான்ஸ்-கேப் நிறுவனமும் பிரைம் நிறுவனமும் மாற்றங்கள் குறித்து ஜூன் 24ஆம் தேதியன்று பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் மூலம் தகவல் தெரிவித்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த கம்பர்ட்டெல்குரோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “டாக்சிகளுக்கான இடத்துக்கேற்ற கூடுதல் கட்டணங்களை டாக்சி நிறுவனங்கள் நிர்ணயிப்பதில்லை. மாறாக, அதை சுற்றுலாத் தலங்களை நிர்வகிக்கும் அமைப்புகளே நிர்ணயிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
“இந்த அமைப்புகள் கூடுதல் கட்டணம் பற்றி அறிவிப்பதற்கு முன் அது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரியப்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.
மண்டாய் வனவிலங்குக் காப்பத்தின்கீழ் செயல்படும் சுற்றுலாத் தலங்களிலிருந்து புறப்படும் டாக்சி பயணங்களுக்கான கூடுதல் கட்டணம் 2022 ஆகஸ்டில் தற்காலிக முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கூடுதல் கட்டண முறை கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தடவை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.