ஹாவ் பார் வில்லா, ஜூரோங் தீவு ஆகியவற்றில் இந்த மாதம் ஓட்டுநர் இல்லாத பேருந்து சேவைகள் தொடங்கின. அதில் மொத்தம் 320 பேர் பயணம் செய்துள்ளனர்.
அந்தப் பேருந்து பயணம் ரம்மியமான அனுபவமாக இருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். பேருந்துகள் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மெதுவாகச் செல்லவில்லை என்று அவர்கள் கூறினர். அவசரகாலத்தில் உதவுவதற்காக ஓட்டுநர் ஒருவர் பணியில் இருந்தது தங்களுக்கு மனநிறைவாக இருந்ததாக அந்தப் பயணிகள் குறிப்பிட்டனர்.
இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் தொடர்ந்து கவலை நிலவுகிறது.
எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனம் சென்ற திங்கட்கிழமை சிங்கப்பூரின் முதலாவது பரிசோதனை ஓட்டத்தைத் தொடங்கியது.
அந்த இரண்டு வழித்தடங்களிலும் ஓட்டுநர் இல்லாத பேருந்துகளில் பயணம் செய்வதற்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
அந்தப் பயணத்திற்கு அவர்கள் ஒரு செயலி மூலம் முன்பதிவு செய்து கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அந்தச் சோதனை ஓட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடம்பெறும்.
ஓட்டுநர் இல்லாத பேருந்துச் சேவையை மிகவும் பரவலாக நடைமுறைப்படுத்த குறைந்தபட்சம் ஐந்து முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்று தொழில்துறை கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
இத்தகைய வாகனத்தை எம்ஆர்டி நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் இடையில் இணைப்புச் சேவையாக பயன்படுத்துவது நடைமுறைக்கு உகந்த இலக்காக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் லிம் கா ஆன், 52, என்பவர் தனக்கு இந்தத் தொழில்துறையில் நாட்டம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தத் துறை இன்னமும் வளர்ச்சி அடையவில்லை என்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் சிங்கப்பூரர்கள் குறிப்பாக இளையர்கள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைத் தழுவிக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பது இன்னமும் தெள்ளத்தெளிவாக தெரியவில்லை என்பதை அவர் சுட்டினார்.
எதிர்பாராத சூழ்நிலைகள் ஏதேனும் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் அவசரகால பொத்தான் ஒன்றை பேருந்துகளில் பொருத்தலாம் என்று சிலர் யோசனை தெரிவித்தனர்.
திருவாட்டி சடோகோ நேமோடோ என்ற 43 வயது ஜப்பானிய குடும்ப மாது, மூன்று மாதமாக சிங்கப்பூரில் இருந்து வருகிறார். இவர் பாசிர் ரிஸ்சில் இருந்து ஹாவ் பார் வில்லா சென்று ஓட்டுநர் இல்லாத பேருந்துச் சேவையை அனுபவித்துப் பார்க்க விரும்பினார்.
அந்தச் சேவை சரளமாக இருக்கிறது என்றும் பேருந்து மின்சாரத்தில் ஓடுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது என்றும் அந்த மாது தெரிவித்தார்.