கொவிட்-19 சூழலிலும் பக்தி குறையாமல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வக்ரதுண்ட விநாயகர் ஆலயத்தின் மூன்றாவது குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது.இக்கோயில், உலகின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள ஆகப் பெரிய கருங்கல் கோயில் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
"இந்து ஆலயத்தை ஏழு விதமான பொருட்களைக் கொண்டு கட்டலாம். கருங்கல்லுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். மற்ற திரவியம் எதையும் சேர்க்காமல் கருங்கல்லை மட்டும் கொண்டு கோயிலைக் கட்ட முடியும் என்பது அதன் தனிச்சிறப்பு," என்றார் கோயிலின் அர்ச்சகர் நித்யானந்தா சிவாச்சாரியார்.
6,000 கிலோ கிராம் எடை கொண்ட ஒரே கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருவறையின் விமானம் ஆஸ்திரேலியாவில் வேறு எங்கும் காணமுடியாதது.
பிரதான கருவறை உட்பட கோயிலில் அமைந்துள்ள மொத்தம் 11 சந்நிதிகள் கருங்கல் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன. அனைத்து கருங்கற்களும் இந்தியாவின் சேலம் நகரத்தின் மலையிலிருந்து எடுக்கப்பட்டு கப்பல் மூலம் மெல்பர்னுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இம்மாதம் 17ஆம் தேதி முதல் குடமுழுக்கு விழா தொடர்பான வழிபாடுகள் தொடங்கின. மெல்பர்னின் கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க அன்றாட வழிபாட்டுக்கு 400 பக்தர்களும் குடமுழுக்கு தினத்தன்று 500 பக்தர்களும் நேரடி வழிபாடுகளில் கலந்துகொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட இரண்டாவது இந்து ஆலயம் இது. 1992ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி இக்கோயிலின் முதல் குடமுழுக்கு விழா நடந்தது.
இக்கோயிலைக் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த திரு சண்முகரத்னம் பிள்ளை, திருமதி பரமேஸ்வரி பிள்ளை தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1989ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கான விநாயகர் சிலைகளைத் தேடி இந்தியாவிற்கு இத்தம்பதி சென்றபோது, காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விநாயகர் சிலை ஒன்றை அளித்தார். மற்றொரு பஞ்சலோக விநாயகர் சிலைஇந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த இரு சிலைகளையும் சிங்கப்பூருக்கு எடுத்து வந்தனர். வக்ரதுண்ட விநாயகர் கோயிலின் மூலமூர்த்தியும் பஞ்சலோக உற்சவமூர்த்தியும் சிலோன் ரோடு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கண் திறப்பு செய்யப்பட்டு விமானம் வழியாக மெல்பர்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.
"கடந்த 17 ஆண்டுகளாக முடிந்தவரை நாள்தோறும் இந்த கோயிலுக்குச் சென்று வருகிறேன். குடும்பத்திற்கும் தனிப்பட்ட வாழ்விலும் அதனால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன," என்றார் இக்கோயிலின் தொண்டூழியரான பக்தர் திரு சங்கர் சுந்தரராஜன், 39.
இன்று காலை 9.15 முதல் 10.30 மணி வரை நடக்கும் குடமுழுக்கு விழாவைக் காண கோயிலின் ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம்.குடமுழுக்கு விழா, கோயிலின் வரலாறு குறித்த மேல் விவரம் பெற www.mvhs.org.au/ என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம்.

