சுறுசுறுப்பு மனதிற்கு மகிழ்வைத் தரும்

சுறுசுறுப்பு மனதிற்கு மகிழ்வைத் தரும்

4 mins read

தினமும் நடைபயிற்சி செய்வது, நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்வது, அங்காடிக்குச் செல்வது, சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என்று ஏதாவது ஒரு வேலையைப் பார்த்து கொண்டு இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் திருவாட்டி ஜர்னைல் கோர், தற்போது தன் 75வது வயதில் இருக்கிறார். இவர் வயதை ஒரு தடையாக எண்ணுவதில்லை, இயல்பாக எண்ணுகிறார். அதோடு, எளிமையான வாழ்க்கை முறையைச் சிறந்த வாழ்க்கை முறையாக கருதுகிறார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்வது கடினம் இல்லை. நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் நடவடிக்கைகளைச் செய்தாலே வாழ்க்கை எளிமையாகிவிடும், என்று கூறுகிறார் திருவாட்டி ஜர்னைல். 'தைச்சி' உடற்பயிற்சி செய்வது, யோகா பயிற்சி செய்வது, கைவினைப்பொருள்கள் செய்ய கற்றுக்கொள்வது, கோயிலுக்குச் செல்வது, 'குரு கிரந்த் சாஹிப்' வாசிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருவாட்டி ஜர்னைல் மகிழ்ச்சியான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இறை நம்பிக்கை அதிகம் உள்ள இவர் வாரத்தில் இரண்டு நாள்கள் சீக்கிய கோயிலுக்குச் செல்வார். அதோடு நின்று விடாமல், அன்னதான சமையலில் சப்பாத்தி செய்யவும் உதவி வருகிறார். தனது நண்பர்கள் சிக்கல்கள் குறித்து இவரிடம் பேசும் போதும், உடல் நல குறைவு குறித்து பேசும் போதும், அவர்களுக்கு எப்போதும் ஊக்கமும் நம்பிக்கையும் அளித்து ஆறுதல் கூறும் திருவாட்டி ஜர்னைல் இறை நம்பிக்கை தனக்கு அளிக்கும் மனநிறைவை மற்றவர்களுக்கும் உதவ பயன்படுத்துவதாகப் பகிர்ந்து கொண்டார்.

கொவிட்-19 கிருமி தொற்றின் போது, இந்தியாவிற்குப் பிரயாணம் செய்திருந்த இவரது கணவர் எதிர்பாராத விதமாக மறைந்த போது, இவர் மனதளவில் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கசந்த காலத்தை கடந்து வருவது கடினமாக இருந்ததென்று கூறினார் திருவாட்டி ஜர்னைல். ஆனால், இவர் தன் வைராக்கியத்தைக் கைவிட வில்லை. இந்த காலகட்டத்தை கடந்து வந்துள்ள திருவாட்டி ஜர்னைல்க்கு தன் கணவருடன் முன்பு 'பிளாசம் சீட்ஸ்' முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கு வந்து சென்ற போது திருவாட்டி ஜர்னைல் சந்தித்த நண்பர்கள் உதவி இருக்கிறார்கள்.

துடிப்பான முதுமைக்கால மையம் ஒன்றான 'பிளாசம் சீட்ஸ்'ஸு'க்கு திருவாட்டி ஜர்னைல் இன்று அடிக்கடி வந்து செல்கிறார். அங்கு சென்றதன் மூலம் அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். நிலையத்திற்கு சென்றால், அங்கு உடற்பயிற்சி செய்வது மட்டும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதையும் செய்கிறார் இவர். இவ்வாறு, நாள் பொழுதை உடல் நலத்தை பேணுவதுடன் மன நலனையும் காத்து, நல்ல முறையில் கழித்து வருகிறார் திருவாட்டி ஜர்னைல்.

நிலையத்தில், உடற்பயிற்சி கூடம் ஒன்று இருக்கிறது. அதில் முதியவர்களின் உடல் வலிமை, இடை போன்றவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உண்டு. இந்த திட்டத்தின் இரண்டு பகுதிகளில், ஒரு பகுதியை திருவாட்டி ஜர்னைல் வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் ஒன்றை பெற்றிருக்கிறார். அடுத்த கட்டத்தையும் முடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் 'பிளாசம் சீட்ஸ்' பிரதிநிதிகள்.

முன்பு, தையல் ஆற்றலை கொண்டு தெரிந்தவர்களுக்கு ஆடைகளை தைத்து கொடுத்து சிறிய வணிகம் ஒன்றை இவர் நடத்தி இருக்கிறார். ஆனால் இப்பொழுது கண்பார்வை மங்கிய காரணத்தால், தையல் வேலைகளை செய்ய முடியவில்லை என்றார் திருவாட்டி ஜர்னைல். ஆனாலும், அலங்காரங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து அந்த ஆர்வத்தை வளர்க்க, கைவினை பொருட்கள், அலங்கார பொருட்கள் போன்றவற்றை செய்யும் வகுப்புகளுக்கு சென்று வருகிறார்.

திருவாட்டி ஜர்னைலின் பிள்ளைகள் தற்போது வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். வீட்டில் தனியாக இருந்தாலும் அது அவருக்கு ஒரு குறையாக தெரியவில்லை, தன் சகோதரரிடமும் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் உரையாடிக்கொண்டும் சந்தித்துக்கொண்டும் தன் நேரத்தை சுறுசுறுப்பாக தனக்கு பிடித்தவாறு கழித்து வருகிறார் திருவாட்டி ஜர்னைல்.

-

மூத்தோர் தொடர்பு, இணைப்பு, சமூக அடிப்படையிலான பராமரிப்பு, சுகாதாரப் பராமரிப்பு, சமூக மனநலன், நிதி ஆதரவு, பராமரிப்பாளர் சேவை போன்றவற்றுக்கான மேல் விவரங்களை 1800-650-6060 எனும் தொலைபேசி எண் மூலமோ www.aic.sg எனும் இணையப்பக்கம் மூலமோ ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பைத் தொடர்புகொண்டு மூத்தோரும் பராமரிப்பாளர்களும் அறிந்துகொள்ளலாம்.

எந்த வயதிலும் மனதளவில் இளமை...

சிங்கப்பூரர்கள் தன்னம்பிக்கையுடன் மூப்படைவதை ஊக்குவிக்க மூப்பைடைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக்குழு தனது முதல் வெற்றிகரமான மூப்படைதலுக்கான செயல் திட்டத்தை 2015இல் அறிவித்தது.

சிங்கப்பூரர்கள் மூப்படையும் போது சுறுசுறுப்பாக இருக்கவும் மனதளவில் இளமையை தழுவவும் செயல் திட்டத்தின் கீழ், 'ஐ ஃபீல் யங் எஸ்ஜி' எனும் பிரசாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூத்தோரின் தேவைகளிலும் விருப்பங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதையடுத்து புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டம் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரர்களின் மூப்படைதல் பயணத்தில் வெவ்வேறு விதத்தில் அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்முயற்சிகள் மூன்று கருப்பொருள்களின் கீழ் அறிவிக்கப்பட்டன.

- அக்கறை: மூத்தோர் தங்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் தாங்களே பார்த்துக்கொள்ளும் அதிகாரத்தை தடுப்புமுறை மருத்துவம், துடிப்புமிக்க மூப்படைதல், பராமரிப்பு சேவைகள் போன்றவை மூலம் பெறச்செய்து அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவும் தாங்கள் விருப்பப்பட்டதை செய்யவும் வழி செய்வோம்.

- பங்களித்தல்: மூத்தோர் தங்களின் அறிதல், அனுபவம் மூலம் சமுதாயத்திற்கு பங்களிக்க வழி செய்து கற்றல், தொண்டூழியம், வேலைவாய்ப்பு போன்றவை மூலம் அவர்கள் தொடர்ந்து சமுதாயத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்வோம்.

- இணைப்பு: பல்வேறு ஆதரவு கட்டமைப்புகள் மூலமும் மின்னிலக்கத் தளங்கள் வழியாகவும் மூத்தோர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடனும் சமூகத்துடனும் தொடர்பில் இருப்பதற்கு ஆதரவு வழங்கப்படும்.

https://go.gov.sg/ifeelyoungsg இணையத்தளம் மூலம் வெற்றிகரமான மூப்படைதலுக்கான 2023 செயல்திட்டம் பற்றிய மேல் விவரங்களைக் கற்றுகொள்ளுங்கள். துடிப்பான முதுமைக்கால மைய நடவடிக்கைகள் போன்ற வழிகளில் திருவாட்டி ஜெர்னைல் கோர் எவ்வாறு தமது தனிப்பட்ட உடல், மன நலத்தைப் பார்த்துகொள்கிறார் என்பதை அறியுங்கள்.

இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது:

-