செயற்கைக் கருத்தரிப்பு முறையில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பிறந்த முதல் சிங்கக்குட்டி 'சிம்பா'

2 mins read

சிங்கப்பூரின் வரலாற்றிலேயே முதல் முறையாக செயற்கை முறையில் கருத்தரித்த சிங்கம் குட்டி ஒன்றை ஈன்றிருக்கிறது.

கடந்த அக்டோபரில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பிறந்த அந்த சிங்கக்குட்டிக்கு 'சிம்பா' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் இன்று (ஜனவரி 26) தெரிவித்தது.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் இருந்த முஸ்தஃபா எனும் ஆண் சிங்கம் இறந்துபோவதற்கு முன்பாகவே அதன் விந்துகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கொண்டு செயற்கை கருத்தரிப்பு முறை செயல்படுத்தப்பட்டது.

20 வயதான 'முஸ்தஃபா' சிங்கத்தின் உடல்நலம் குன்றியதே அதன் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. அதனை கருணைக் கொலை செய்வது அவ்வளவு எளிய முடிவாக இருக்கவில்லை எனவும் விலங்கியல் தோட்ட பராமரிப்பாளர்களும் கால்நடை மருத்துவர்களும் நன்கு ஆலோசித்தே அந்த முடிவை எடுத்தனர் என்றும் காப்பகம் தெரிவித்தது.

-

பொதுவாக ஆப்பிரிக்க சிங்கங்கள் காடுகளில் 10 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை.

4 முறை செய்யப்பட்ட செயற்கை கருத்தருப்பு முயற்சியில் இந்த ஒரு முறை மட்டுமே செயல்முறை வெற்றிபெற்றது.

அழிவின் விழிம்பில் இருக்கக்கூடிய அரிய வகை சிங்கங்களில் முஸ்தஃபாவும் ஒன்று. அதனால், அந்த வகை சிங்கக்குட்டிகள் மிகவும் மதிப்பு மிக்கவை.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிம்பா தன் தாயான கைலாவின் பராமரிப்பில் நல்லபடி வளர்ந்து வந்தாலும் அதற்குப் பிறகு அதற்கு கூடுதல் துணை உணவு தேவைப்பட்டது.

-

பிறந்த 3 மாதங்களில் நல்ல முன்னேற்றம் காட்டிய சிம்பாவின் கண்கள் அதன் தந்தை முஸ்தஃபாவினுடையதைப் போல இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான நேரங்களில் விளையாடியே பொழுதைக் கழிக்கிறது சிம்பா.

தற்போது கைலாவும் சிம்பாவும் தனிப்பட்ட பகுதியில் பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் அம்மா - மகன் உறவு மேம்படும் என்று கூறப்படுகிறது. அவர்களைத் தற்போது பார்வையாளர்கள் பார்க்க முடியாது.

தற்போது சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் டிம்பா, சிம்பா எனும் 2 ஆண் சிங்கங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.