தாதியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நோயாளிகள் பங்கேற்கும் மெய்நிகர் நடை

2 mins read

எழுபத்திரண்டு வய­தான திரு ரேமண்ட் பால­கி­ருஷ்­ணன் சுமார் 20 முறை மார­டைப்­புக்கு ஆளா­னார். 2017ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து அவர் இரண்டு மாதங்­க­ளுக்கு நினை­வி­ழந்த நிலை­யில் இருந்­தார். பின்­னர் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பிறகு, அவர் அசிசி அந்­தி­ம­காலப் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் சேர்க்­கப்­பட்­டார். அங்கு சக்­கரநாற்­கா­லி­யின் உதவி அவ­ருக்குத் தேவைப்­பட்­டது.

ஓய்­வு­பெ­று­வ­தற்கு முன் கட்டு­மா­னத் துறை­யில் கன­மான பொருட்­களை நகர்த்­தும் பணி­யில் இருந்த திரு பால­கி­ருஷ்­ணன், தற்­போது மீண்­டும் நட­மா­டு­கி­றார். அந்­தி­ம­கா­லப் பரா­மரிப்பு இல்­லத்­தி­லுள்ள தாதி­யர் தனக்­குப் பரா­ம­ரிப்­புச் சேவை­களை வழங்­கு­வ­தில் காட்­டிய அக்­கறை அதற்­குக் கார­ணம் என்று அவர் சொன்­னார்.

தாதி­ய­ருக்­குத் தனது நன்றி­யைத் தெரி­விக்க, அசிசி இல்­லம் முதன்­மு­றை­யாக நடத்­தும் "I Race for Nurses" மெய்­நி­கர் ஓட்­டம் மற்­றும் ந­டை­யில் திரு பால­கி­ருஷ்­ணன் நேற்று கலந்­து­ கொண்­டார்.

அதன் மூலம் அடி­டாஸ் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­திற்கு நிதி திரட்­டப்­படும். அந்­தத் தொகை, கால­ணிப் பற்­றுச்­சீட்­டு­க­ளா­கத் தாதி­ய­ருக்கு வழங்­கப்­படும்.

தாதி­யர் இல்­லை­யென்­றால் தனது உடல்­நிலை இவ்­வ­ளவு முன்­னே­யி­ருக்­காது என்­றார் திரு பால­கி­ருஷ்­ணன்.

அசிசி இல்­லத்­தின் வளா­கத்­தில் நடை­பெற்ற மெய்­நி­கர் நடை­யில் மேலும் 19 நோயா­ளி­களும் பங்­கேற்­ற­னர். அவர்­கள் மொத்­தம் ஒன்­பது கிலோ­மீட்­டர் தூரம் நடந்­த­னர்.

ஒவ்­வொரு முறை 100 கிலோ­மீட்­டர் தூரம் நிறை­வ­டை­யும்­போது அடி­டாஸ் சிங்­கப்­பூர் 100 வெள்ளி மதிப்­பு­கொண்ட பற்­றுச்­சீட்டை ஒரு தாதிக்கு வழங்­கும். பங்­கேற்­பா­ளர்­கள் மொத்­த­மாக 15 ஆயி­ரம் கிலோ­மீட்­டர் நடந்து முடிக்­கும்­போது இல்­லத்­தி­லுள்ள அனைத்து தாதி­ய­ருக்­கும் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­படும்.

நடை நிகழ்ச்சி பொது­மக்­க­ளுக்குத் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. 3,400க்கும் அதி­க­மா­னோர் அதில் கலந்­து­கொள்ள விண்­ணப்­பித்­துள்­ள­னர். விண்­ணப்­பங்­கள் சென்ற மாதம் தொடங்­கின.

ந­டை நிகழ்ச்சிக்­குப் பொது­மக்­கள் 18 ஆயி­ரம் வெள்­ளிக்கு மேல் நன்­கொடை வழங்­கி­யுள்­ள­னர்.

அசிசி அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்பு இல்­லம் தாம்­சன் ரோட்­டில் உள்ள மவுன்ட் அல்­வர்­னியா மருத்­து­வ­மனைக்கு அரு­கில் உள்­ளது. அடுத்த மாதம் 1ஆம் தேதி­யன்று தாதி­யர் தினம். தங்­க­ளின் பணி­யை­யொட்டி தினந்­தோ­றும் 12 கிலோ­மீட்­டர் வரை நடக்­கும் தாதி­ய­ருக்கு நன்றி தெரி­விக்­கும் நோக்­கு­டன் ­ந­டைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

தான் செய்­யும் வேலை­யைப் பிறர் கவ­னித்­துப் பாராட்­டு­வ­தைத் தன்­னால் உண­ர­மு­டி­வ­தாக இல்­லத்­தில் பணி­பு­ரி­யும் 32 வயது தாதி ரேச்­சல் எட­லீன் வோங் குறிப்­பிட்­டார். 12 ஆண்­டு­க­ளா­கத் தாதி­யாக இருக்­கும் அவர், அதி­கம் நடப்­ப­தால் கால­ணி­கள் தாதி­ய­ருக்கு முக்­கி­யம் என்­றார். பெரு­ந­டை­யில் நோயா­ளி­கள் ஆனந்­த­மா­கப் பங்­கேற்­ற­தைக் கண்டு அவர் மகிழ்ச்சி­ அடைந்­தார். நோயா­ளி­கள் மகிழ்ச்சி­ யாக இருப்­பது தனக்­கும் மகிழ்ச்சி தரும் என்று அவர் சொன்­னார்.

மெய்­நி­கர் நடை இன்று முதல் இம்­மா­தம் 31ஆம் தேதி­வரை நடை­பெ­றும். பங்­கேற்க விரும்­பு­வோ­ருக்­குக் கட்­ட­ணம் கிடை­யாது.