தினந்தோறும் புது அனுபவம் தரும் ஓபிஎஸ்

6 mins read

வேறுபட்ட துறை பின்னணிகளிலிருந்து வந்த டிரேசியும் இக்பாலும் வெளிப்புற நடவடிக்கை துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். என்ன எதிர்பார்ப்பது என்பது குறித்து குறைந்த அளவிலான தகவல்களும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. புதிய முயற்சியில் இறங்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை (ஓபிஎஸ்) பயிற்றுவிப்பாளர்களாக இருவரும் இணைந்தனர்.

-

"இளையர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைத் தந்தது"

திரு இக்பால் கான் தனது பத்தாண்டு கால பணி பயணத்தில் அடியெடுத்து வைத்த துறைகள் பல.

தற்போது சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை (ஓபிஎஸ்) பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து வரும் அவர், இதற்கு முன், தீயணைப்பாளராக, நிகழ்வு நிர்வாகியாக, துணை இயக்க நிர்வாகியாக பல்வேறு பரிமாணங்களை மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில், தன்னை வழிநடத்தி சீர்படுத்திய ஆசிரியர்களை நினைவில் வைத்திருந்தார் திரு இக்பால்.

அத்தகைய நல்ல தாக்கத்தை இளையர்களிடத்தில் ஏற்படுத்தும் அவரது அவாவுக்கு ஏற்ப அமைந்தது, ஓபிஎஸ்ஸின் பயிற்றுவிப்பாளர் பணி.

வெளிப்புற நடவடிக்கை துறை அளிக்கும் வேறுபட்ட வாய்ப்புகள் இத்துறையில் தனது ஆர்வத்தை கண்டறிந்த திரு இக்பாலின் மனதுக்கு நெருக்கமானவை. இளமையாக உணரவைக்கும் இளையர்களுடன் சிரித்து உரையாடி நற்பண்புகளை புகட்டுவது, காலையில் காணும் சூரிய உதயம், நீண்டதூர நடை பயணங்கள் என அவரை கவர்ந்துள்ள அங்கங்கள் பல. முழுக்க முழுக்க வெளிப்புற இயற்கை சூழலில் பயிற்சி மேற்கொண்டு மாணவர்களை வழிநடத்துவதில் அவர் இன்பம் காண்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் பல்கலைக்கழகம் சென்று இளங்கலை பட்டம் பெற்ற திரு இக்பால் வகுப்பறை தாண்டிய கல்வியை நம்பியே வேலைத்துறையில் கால் வைத்தவர். வகுப்பறை கல்வியையே ஆக முக்கியமாக கருதும் போக்கோ தற்போது அதிகரித்து வரும் நிலையில், வெளியிலும் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் உண்டு என்பதை உணர்த்துவதில் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள் பங்காற்றுவதாக கூறினார் திரு இக்பால்.

ஓபிஎஸ் முகாமுக்குப் பல்வேறு பின்னணிகளிலிருந்து வருகின்றனர் மாணவர்கள். பலமுறை, ஒருவரை ஒருவர் இம்முகாம் மூலமே அவர்கள் தெரிந்துகொள்வர். பலர் வீட்டையும் குடும்பத்தையும் பிரிந்து இத்தனை நாள் இருந்திருக்கமாட்டார்கள்.

இவர்களுக்கு ஆதரவும் ஆறுதலும் அளிப்பது பயிற்றுவிப்பாளர்களின் முக்கிய கடமை. இம்முகாம் மூலம் கிட்டக்கூடிய கல்வியைப் பாடங்களாய் நேரடியாக புகட்டாமல், அதனை அணுகுவதற்கு பயிற்றுவிப்பாளர்கள் சரிவர வழிகாட்டவேண்டும்.

"கவனச்சிதறல்களுக்குக் காரணமாக இருக்கும் கைபேசி, கணினி முதலியவை இன்றி, வீட்டில் இருக்கும் வசதிகள் இன்றி, வாழ்நாள் முழுக்க நீடிக்கும் நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஓபிஎஸ் முகாம் வழிவகுக்கிறது. எதிலும் எங்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாழ்நாள் கல்வியை இது மாணவர்களிடத்தில் மட்டுமின்றி, எங்களிடத்திலும் வலியுறுத்துகிறது," என்றார் 29 வயது திரு இக்பால் கான். இதனால், தான் வேலை மாறியதில் எவ்வித வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு வாரமும் ஐந்து நாள் நீடிக்கும் கல்வி அமைச்சு-ஓபிஎஸ் முகாம் திட்டத்தை வழிநடத்துகின்றனர் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள். எனவே, வாரத்தில் ஐந்து நாட்கள் வரை இவர்கள் ஓபிஎஸ் வளாகங்கள் ஒன்றில் தங்கியாக வேண்டும். இதுவே மாறுபட்ட, தனித்துவமான ஓர் அனுபவத்தை அளிப்பதாக கருதுகிறார் திரு இக்பால்.

உடற்பயிற்சியில் திரு இக்பாலுக்கு ஈடுபாடு உண்டு. ஆனால், பலதரப்பட்ட நில, நீர் நடவடிக்கைகளைக் கொண்டுள்ள ஓபிஎஸ்ஸுக்கு அவர் புதிது. முதன்முதலில் பயிற்றுவிப்பாளர் தேர்விற்கு அவர் வந்த சமயத்தில், காயாக் படகில் துடுப்பு வலிக்கத் தெரியாதது அவரின் கவலைகளில் ஒன்றாக இருந்தது.

ஓபிஎஸ்ஸின் அடிப்படை பயிற்றுவிப்பாளர் பயிற்சி திரு இக்பாலின் கவலைகளைப் போக்கியது. பயிற்றுவிப்பாளராக செவ்வனே பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அவருக்கு தேவைப்பட்ட திறன்களை இப்பயிற்சியின்மூலம் அவர் பெற்றுக்கொண்டார். அறிமுகமில்லாத வெளிப்புற நடவடிக்கைகளில் கைதேர்ந்தவராவதற்கான வாய்ப்புகளை ஓபிஎஸ் வழங்கும் காரணத்தினால், கவலை வேண்டாம்; மனமிருந்தால் போதும் என்றார் திரு இக்பால்.

-

வேறெதிலும் கிட்டாத நிறைவை கண்டார்

வெளிப்புறத் துறையில் பணித்தேக்கம் அடைவது குறித்த கவலைகள் வேண்டாம் என்றார், பயிற்றுவிப்பாளராக இணைந்து தற்போது குழு நிர்வாகியாக பணியாற்றி வரும் டிரேசி டிக்ருஸ் (படம்). பல்கலைக்கழக பட்டதாரியாக அவர் முதன்முதலில் மேற்கொண்டது, ஓபிஎஸ்ஸின் பயிற்றுவிப்பாளர் பணியே. பணியின்மீது கொண்ட ஆர்வத்தால் இத்துறையிலேயே கடந்த ஐந்தாண்டுகளாக தங்கிவிட்டார் 28 வயது டிரேசி.

இவரின் பிரதான கவலையாக இருந்தது, அலுவலக வாழ்க்கை கட்டமைப்பில் முடங்குவதே. சிங்கப்பூரின் பரபரப்பான, அவசர வேலை வாழ்க்கையை டிரேசி வெறுத்தார். 9-5 எனும் கட்டமைப்புக்குக் கட்டுப்படக் கூடாது என்று திண்ணமாக இருந்தார். அவரின் விருப்பங்களுக்கு இணங்க அமைந்தது, ஒவ்வொரு நாளும் மாறுபட்ட புது அனுபவங்களை வழங்கும் ஓபிஎஸ்.

வெளிப்புற நடவடிக்கை துறையில் டிரேசிக்கு எவ்வித அனுபவமும் ஏற்ற பின்னணியும் இருந்ததில்லை. அவர் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றதோ ஆங்கில இலக்கியம். சிறிய உருவம் கொண்டிருந்த அவருக்கு, இது தனது பணியில் குறுக்கீடாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. எனினும், இவற்றை தடைகளாய் கருதவில்லை டிரேசி.

மாறாக, அவை தன்னை செதுக்கும் சவால்களென கருதி அவர் இம்முயற்சியில் தொடர்ந்து உழைத்தார்.

வேறுபட்ட ஒரு களத்தில் பணிபுரியவும் அதில் சிறந்து விளங்கவும் பல்கலைக்கழகம் முடிந்த கையோடு தனக்குத் தானே சவால் விடுத்திருந்தார் டிரேசி. அறிமுகமில்லாத திறன்களைக் கற்றுக்கொண்டு அவற்றின் துணைகொண்டு வளர்வதற்கு அவர் முன்னுரிமை அளித்தார். அதில் அவர் கொண்டிருந்த விடாமுயற்சியினாலும் உழைப்பினாலும் பணிசார்ந்த சவால்களை தகர்த்து பணியில் உயர முடிந்தது அவரால். சிங்கப்பூர் காவல்துறை பயிற்சி படை மாணவர்களுடன் 19 நாட்கள் செலவழித்த அனுபவம் டிரேசியின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. பொதுவாக குறுகிய காலத்தையே மாணவர்களுடன் செலவிடும் நிலையில் இவ்வாய்ப்பு சிறப்புமிக்கதாக அமைந்தது. 19 நாள் நீடித்த இந்த ஓபிஎஸ் முகாம் வாயிலாக மாணவர்கள் தங்களின்மீதே நம்பிக்கை கொள்ள தொடங்கியதை நேரில் கண்டார் டிரேசி. தங்களின் உள்ளும் தலைமைத்துவ பண்புகள் இருப்பது மாணவர்களுக்கு புலப்பட்டது.

பயிற்றுவிப்பாளர்களான தங்களுடனும், சக மாணவர்களுடனும் இன்னும் நெருக்கமான பந்தங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

பல பணிகளில் ஊழியர்கள் தாங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்கூடாக காணவோ உணரவோ முடிவதில்லை. அந்த வாய்ப்பினை ஓபிஎஸ் தனக்கு நல்கியுள்ளதை உணர்ந்தார் டிரேசி. மாணவர்களின்மீது தான் கொண்டிருந்த தாக்கத்தைக் கண்டபோது அவர் நெகிழ்ந்தார். "இப்பணி எளிதானதாக தோன்றலாம். ஆனால், படகு வலித்தல், ஏறுதல், வழிசெலுத்துதல் என பல்வேறு முக்கிய திறன்களை பயிற்றுவிப்பாளர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். அதே சமயம், இளையர்களை பயிற்சிகளின்மூலம் மேம்படுத்துவதற்கும் பயிற்றுவிப்பாளர்கள் உதவவேண்டும்," என்றார் டிரேசி.

இப்படி பலவகையான பொறுப்புகளை ஒருங்கே கையாள எதிர்பார்க்கப்படுகின்றனர் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள். முழுமை கல்வி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்பதை அவர்கள் மறக்கலாகாது. அதற்கேற்ப, அவர்களின் அனுபவத்தை வடிவமைப்பது பயிற்றுவிப்பாளர்களின் கையிலே உள்ளது. இதையே டிரேசி குழு நிர்வாகியாக பெரிதும் வலியுறுத்தி வருகிறார். புது, இளைய ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்களுக்கு தற்போது வழிகாட்டும் அவர், பயிற்றுவிப்பாளர்களின் வேலைப் பயணங்களுக்கு ஊட்டமும் அளிக்கிறார்.

எவ்வாறு தொடர்ந்து இப்பணியில் வளரலாம்; தங்களை எவ்வாறு மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம் முதலியவற்றை குறித்து இளைய பயிற்றுவிப்பாளர்கள் டிரேசியிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர். ஓபிஎஸ்ஸில் பணிபுரிவோர் இவ்வகையில் ஒரு குடும்பமாகவே இயங்குகின்றனர் என்பது டிரேசியின் பார்வை. வாரத்தில் ஐந்து நாட்கள் வரை வீட்டையும் குடும்பத்தினரையும் பிரிந்து இருந்தாலும், ஒருவருக்கொருவர் தேவையான ஆதரவை அளித்துக்கொண்டு உதவிக்கொள்வதாக தெரிவித்தார் டிரேசி.

ஓபிஎஸ்ஸின் பணிச்சூழல் குறித்து விவரிக்கையில், "வெளிப்புறமே எங்களது அலுவலகம். கடலிலும் காட்டிலும், மழை, வெயிலிலும் இடையே நாங்கள் பணிபுரிகிறோம். சூரியோதயமும் அஸ்தமனமும் எங்களை தினமும் வரவேற்கும் காட்சிகள்," என்றார் அவர். இந்த அனுபவங்கள் டிரேசியை தனிப்பட்ட முறையில் வளர்த்தும் செதுக்கியும் உள்ளன.

அவரின் பார்வைகளை மாற்றியமைத்ததுடன், குறுகியக் கால வாழ்க்கையை முழுமையாக ரசித்து வாழும் உணர்வை அவருக்கு தந்துள்ளன. பணியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் நல்ல தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.

ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள் எதிர்நோக்க கூடியவை

கல்வி அமைச்சு பள்ளிகளில் வெளிப்புற நடவடிக்கை கல்வியை விரிவுபடுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் உயர்நிலை மூன்று மாணவர்களுக்கான 'கல்வி அமைச்சு-ஓபிஎஸ் சேலஞ்ச் திட்ட' முகாம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026ஆம் ஆண்டு முதல் எல்லா உயர்நிலை மூன்று மாணவர்களும் இத்திட்டத்தில் பங்கேற்பர்.

புலாவ் உபினில் இயங்கி வரும் ஓபிஎஸ் வளாகத்தை தவிர்த்து, 2024ஆம் ஆண்டுக்குள் தயாராக இருக்கிறது கோனி தீவில் அமைந்துள்ள மற்றுமொரு ஓபிஎஸ் வளாகம். கல்வி அமைச்சும் கலாசார, இளையர்துறை அமைச்சும் இணைந்து இவ்வளாகத்தை எழுப்ப உள்ளன.

மெடிசேவுடன் கூடிய மானியம் பெற்ற வெளிநோயாளி திட்டத்தின்கீழ் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்களின் மாதாந்திர ஊதியத்தில் கூடுதல் 2 விழுக்காடு அவர்களின் மெடிசேவ் கணக்கில் சேர்க்கப்படும். மருத்துவ செலவுகளுக்காக ஆண்டுதோறும் $500 வரையிலான கழிவுகளையும் அவர்கள் எதிர்பார்க்கலாம்.

வெளிப்புற நடவடிக்கை துறை குறித்து பலரும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம்; இத்துறையில் இருக்கும் பணி வாய்ப்புகள் குறித்த சந்தேகங்களைக் கொண்டிருக்கலாம். ஆர்வமுள்ளோர் மே மாதம் நிகழவிருக்கும் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர் தேர்வை எதிர்நோக்கலாம்.