சிங்கப்பூரில் நற்பண்பு, குடியியல் கல்வி கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கத்துடன் கல்வி அமைச்சும் தேசிய கல்விக் கழகமும் இணைந்து நற்பண்பு, குடியியல் கல்விக்கான சிங்கப்பூர் நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
தேசிய கல்விக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையம் சிங்கப்பூரிலுள்ள ஒரே நற்பண்பு, குடியியல் கல்விக்கான நிலையம். கற்றல், கற்பித்தல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது அனைத்து அம்சங்களிலும் அவர்கள் முன்னேற இந்நிலையம் வழிவகுக்கின்றது.
நற்பண்பு, குடியியல் கல்விப் பாடங்கள் சிங்கப்பூரில் அனைத்து நிலை மாணவர்களுக்கும் கற்பிக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் சான்ட்ஸ் எக்ஸ்போ அரங்கில் நேற்று நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் மாநாடு, உன்னத விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், "நம் மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைக் கற்றலில் புகுத்தி மாணவர்களின் கற்றல் அனுபவங்களை மேம்படுத்த வேண்டும்," என்றார்.
இவ்விழாவில் 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் ஆசிரியர் சமூகத்தை வலுப்படுத்துவது பற்றியும் அதன்மூலம் எப்படி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தலாம் என்பது பற்றியும் பேசிய அமைச்சர், அனைவருக்குமான ஒரே கற்றல்தள (ஒன் போர்ட்டல் ஆல் லர்னர்ஸ்) அமைப்பைச் சான்றாகச் சுட்டினார்.
இந்த அமைப்புமுறையின் மூலம் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் திட்டத்தை ஆவணப்படுத்த முடிவதோடு கற்றல் வளங்களையும் எளிதாக அந்தத் தளத்தில் காணலாம்.
"நற்பண்பு, குடியியல் கல்வி, ஆராய்ச்சியின் முக்கிய உலகளாவிய மையமாக சிங்கப்பூர் திகழும் நோக்கத்துடன் இந்நிலையத்தில் நம் பயணத்தை நாம் தொடங்க வேண்டும்," என்று திரு சான் கேட்டுக்கொண்டார்.
2018ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட 'எஸ்எல்எஸ்' என்ற மாணவர்களுக்கான இணையக் கற்றல்தளம் இன்று மாணவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
பாட வடிவமைப்புகள், காணொளிகள், வீட்டுப்பாடங்கள் என 12,000 கற்றல் வளங்களைக் கொண்டுள்ள இத்தளத்தை 84 விழுக்காடு மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தி வருகின்றனர்.
"'எஸ்எல்எஸ்' போன்ற இணையக் கற்றல் தளங்களையும் மற்ற புதிய தொழில்நுட்பங்களையும் ஆசிரியர்கள் அரவணைக்க வேண்டும்," என்று திரு சான் வலியுறுத்தினார்.

