சிங்கப்பூர் அழகியான குமாரி ஹோ காய் லிங், 18, தம்முடைய வாழ்வின் மிகப்பெரிய நிகழ்ச்சியில் போட்டியிட, கரீபிய நாடான புவேர்ட்டோ ரிக்கோவில் மூன்று வாரம் இருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 'மிஸ் வொர்ல்ட் சிங்கப்பூர்' அழகியாக இவர் மகுடம் சூடினார்.
புவேர்ட்டோ ரிக்கோ தலைநகர் சான் ஜுவானில் உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு, போட்டி ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதே அதற்குக் காரணம். கிருமி தொற்றியவர்களில் மலேசிய அழகி, இந்தோனீசிய அழகி, இந்திய அழகி உள்ளிட்டோரும் 15 பணியாளர்களும் அடங்குவர்.
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட குமாரி ஹோவுக்கு கொவிட்-19 பரிசோதனையில் 'தொற்று இல்லை' என முதலில் தெரியவந்தது.
ஆனால், டிசம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பிய இவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது ஹோட்டல் ஒன்றில் இவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
குமாரி ஹோவுக்கு இருமலும் விட்டுவிட்டு தலைவலியும் ஏற்படுகிறதாம்.
"கொவிட்-19, நம்மிடம் இருந்து நிகழ்ச்சியைப் பறித்துச் சென்றிருக்கலாம். ஆனால், நீங்கா நினைவுகளும் நீடித்த நட்பும் என்றென்றும் மறையாது," என்றார் இவர்.

