பீச் ரோட்டில் தமது மனைவியைக் கொல்ல முயன்ற ஆடவரை நிறுத்த முயன்ற உணவக ஊழியர்கள், அந்த நேரத்தில் உதவியே ஆக வேண்டும் என்று உணர்வால் தள்ளப்பட்டு செயல்பட்டதாகக் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 14) அன்று மாலை நடந்த அந்தச் சம்பவத்தில் தமது 41 வயது மனைவியை 46 வயது ஆடவர் ஒருவர் வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கினார்.
அவரை காவல் துறையினர் டேசர் சாதனத்தால் கட்டுப்படுத்தி கைது செய்தனர்.
ஆடவர் மீது நாளை சனிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
பீச் ரோட்டில் ஸொங் ஹுவா ஸ்டீம்போட் உணவகம் அருகே அந்த பெண் உதவிகேட்டு அலறியதை அங்கிருந்த உணவகங்களின் ஊழியர்கள் கேட்டனர்.
அவர் மீது ரத்தம் வழிய, ஆடவர் அவரை தாக்கிக் கொண்டிருந்தார்.
பிளாஸ்டிக் நாள்காலிகள், இரும்பு அறிவிப்புப் பலகைகள், குப்பைத் தொட்டிகள் போன்றவற்றை உணவக ஊழியர்கள் அந்த ஆடவர் மீது வீசினர்.
உதவியவர்களில் ஒருவரான 30 வயது ஜாக்கி டீ தாம் அந்த நேரத்தில் தாம் செயல்படவில்லை என்றால் அந்தப் பெண்ணின் உயிர் போகக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டார்.
"அவர் உயிர் எங்கள் கண்முன் ஊசலாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஏதும் செய்யாமல் இருக்க முடியலில்லை", என்றார் திரு டீ.
ஆடவர் திரு டீயைத் தாக்க முயன்றார். ஆனால் நல்ல வேளை, உணவக ஊழியர் ஒருவர் அவரை நாற்காலிகளைக் கொண்டும் இரும்புத் தட்டுகளைக் கொண்டும் தடுத்தார்.
திரு டீயின் முதலாளி திரு லியனார்ட் ஷியும் ஆடவரைத் தடுக்க உதவினார்.
அந்த இடத்தில் 40 மேற்பட்டவர்கள் இருந்தபோதும், 10 பேர் தான் உதவினர் என்றார் அவர். ஆடவர் கையில் வெட்டுக்கத்தி இருந்ததால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது என்று அவர் சொன்னார்
இறுதியில் அந்த ஆடவரை உணவகங்களுக்குப் பின்னால் இருந்த சந்துக்குள் ஊழியர்கள் துரத்தினர்.
உணவக ஊழியர்களின் துணிவை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டினர்.
அவர்களுடன் மத்திய போலிஸ் பிரிவின் தலைமை அதிகாரியான காவல்துறை துணை ஆணையர் (ஏசி) ஜெரமி ஆங்கும் ஊழியர்களைப் பாராட்டினார்.
அதே போல நிதானம் தவறாமல் ஆடவரைக் கட்டுப்படுத்திய காவல்துறை அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.
சம்பவ இடத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் விரைந்திருந்தனர்.
தாக்குதலை நடத்திய ஆடவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உண்டு என்றும் அவர்களைத் தெரிந்த அப்பகுதி ஊழியர்கள் கூறினர்.

