புதிய ஆப்பிள் 14 ரக கைத்தொலைபேசி இன்று வெளியிடப்பட்டது. இதை வாங்குவதற்காக ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஆப்பிள் கடைக்கு வெளியே நேற்றிரவிலிருந்து மக்கள் வரிசை பிடித்து காத்திருந்தனர். நேற்று மாலை 6 மணிக்கு வாடிக்கையாளர்கள் கடைக்கு வெளியே திரள தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. அப்படி வரிசை பிடித்து நின்றவர்களில் பலர் வியட்நாமிலிருந்து வந்தவர்கள். புதிய தொலைபேசியை வாங்குவதற்காகவே அவர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். கிட்டத்தட்ட 500 பேர் வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இரண்டு வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொலைபேசிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு வரிசை; தொலைபேசியை பார்த்துவிட்டு அதை வாங்க விரும்புவோருக்கு மற்றொரு வரிசை.
அப்படி முன்பதிவு செய்து தொலைபேசியை முதலில் வாங்கிகொண்டவர் ஒரு மலேசிய ஆடவர். ஒரு வாரத்துக்கு முன்பே தொலைபேசிக்காக அவர் முன்பதிவு செய்துவிட்டார். சாங்கி விமான நிலையத்தில் நேற்று முன்தினத்தை கழித்த அவர் நேற்று மாலை வரிசை பிடித்துகொண்டார். மலேசியாவில் ஆப்பிள் கடை கிடையாது. ஒரு ஆப்பிள் கடைக்கு நேரடியாக வந்து புதிய தொலைபேசியை வாங்குவது ஒரு தனி அனுபவம் என்றார் அவர்.
புதிய ஆப்பிள் தொலைபேசியின் ஆரம்ப விலை $1,649 என்று அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.