சிங்கப்பூரின் புகழ்பெற்ற பூமலையின் இருவேறு பகுதிகளை இணைக்க நடைபயணிகளுக்கான 200 மீட்டர் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
அதனால் பூமலைக்குச் செல்பவர்கள் டையர்சால் அவென்யூவைக் கடந்து, பூமலையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லத் தேவை இருக்காது.
இளம் பிள்ளைகள் உள்ளவர்கள், உடற்குறையுள்ளவர்கள் என எல்லாரும் செல்லும் தடையில்லாதப் பாலமாக புதிய மேம்பாலம் அமைந்துள்ளது.
எச்பிஎல் கேனபி எனப்படும் அந்த மேம்பாலம் வியாழக்கிழமை (நவ. 17) அன்று திறக்கப்பட்டது.
டையர்சால் அவென்யூவின் இருவேறு பக்கங்களில் உள்ள விரிவாக்கப்பட்ட கேலப் பகுதியையும் கற்றல் வனத்தையும் பாலம் இணைக்கிறது.
மேம்பாலத்தின் திறப்புவிழாவில் பேசிய சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் சிங்கப்பூரர்கள் இங்குள்ள பசுமையிடங்களை மீண்டும் கண்டறிந்தனர் என்று கூறினார்.
"சிங்கப்பூரில் உள்ள பசுமையை நான் உள்ளிட்ட பலரும் இப்போது பாராட்டப் பழகியுள்ளோம்," என்றார் அவர்.

