பீச் ரோடு வட்டாரத்தில் ஒரு பெண்ணை வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிய 46 வயது ஆடவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் வந்தனர்.
கைதான ஆடவர் தன் மணிக்கட்டுகளை வெட்டிக்கொண்டார் என்றும் அந்த பெண்ணை கத்தியால் சரமாரியாகத் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த காணொளிகள் இணையத்தில் வலம் வருகிறது என்றும் அதனை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் காவல் துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.
அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்த அருகில் உள்ளோர் கையில் கிடைத்த மேசை, நாற்காலி, குப்பைத் தொட்டி போன்ற பொருட்களைக் கொண்டு அவர் மீது வீசுவதும் காணொளியில் தெரிந்தது. அவர்கள் அருகில் உள்ள உணவக ஊழியர்கள் போல தெரிந்தனர்.
அந்த ஆடவரின் கைகள் இரத்த வெள்ளத்தில் இருந்தது. வெட்டு பட்ட பெண்மணி பிறகு எழுந்து அமர்ந்தபோது அவரது தலை, கை, கால்களில் ரத்தம் இருந்ததும் தெரிந்தது. அந்த ஆடவர் அந்தப் பெண்மணியின் கணவர் என நம்பப்படுகின்றது. அவர் மீது சனிக்கிழமை நீதிமன்றத்தில் கொலை முயற்சிக்காக குற்றம் சுமத்தப்படும்.
இன்னொரு காணொளியில் கத்தியைக் கொண்டு பெண்ணை வெட்டிய ஆடவர் போல் தெரிந்த ஒருவரை காவல் துறையினர் 'டேசர்' துப்பாக்கியால் சுட்டு பிடித்தது தெரியவந்தது.