மண்டாய் தகனச்சாலைக்கு வெளியே வியாழக்கிழமை பிற்பகல் (டிசம்பர் 16) வாடகைப் பேருந்து ஒன்று முற்றிலும் தீக்கிரையானது.
அதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் அதிகளவில் பகிர்ந்துகொள்ளப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர், மண்டாய் அவென்யூவில் நிகழ்ந்த தீச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததாகவும் அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் தண்ணீரையும் நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாகவும் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. பேருந்து எரிந்தபோது கிளம்பிய புகை வானுயர வரை எட்டியதைக் காணொளியில் காணமுடிந்தது.
பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடப்பதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

