தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நிதி திரட்டு

3 mins read
cb761ecc-96a0-4599-bfe8-628873ffe01f
தமிழர் பேரவையின் நிதி திரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் சண்முகம். - படம்: தமிழர் பேரவை
multi-img1 of 4

தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவாக நடத்தப்படும் திட்டங்களுக்கும் கல்வியில் சிறப்புத் தேர்ச்சிபெறும் மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கும் கைகொடுக்கும் விதமாக, தமிழர் பேரவை பிற அமைப்புகளுடன் கைகோத்து $100,000 திரட்டியிருக்கிறது.

இதன்மூலம் கிட்டத்தட்ட 150 மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சிங்கப்பூர் தமிழர்களின் வளர்ச்சிக்கு கல்வி மூலம் பல திட்டங்களை வித்திட்ட சிறப்புக்குரியது.

ஆண்டுதோறும் தமிழர் பேரவை ஏற்பாடு செய்யும் தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் இவ்வாண்டு நிதி திரட்டு அங்கம் முக்கியமானதாகத் திகழ்ந்தது.

கிட்டத்தட்ட 400 தமிழ்ச் சமூகத் தலைவர்களும் இதர அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை காத்திப்பில் இருக்கும் ‘ஹோம்டீம் என்எஸ்’ வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விருந்து விழாவில் வேறொரு அங்கமாக தமிழர் பேரவையின் ‘மாண்புமிகு சமூக சேவை’ விருது, மறைந்த சிங்கப்பூரின் மதிப்புமிகு நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளரும் மூத்த சமூக சேவையாளருமான ஆ.பழனியப்பனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்மொழிக்காக பல்வேறு பணிகளை ஆற்றிய அவரை நினைவுகூரும் விதமாக அளிக்கப்பட்ட அவ்விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுகொண்டனர்.

“இத்தனை ஆண்டுகளில் தமிழர் பேரவை எடுத்துள்ள முயற்சிகள் மூலம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிதி திரட்டு, சமூகத்தில் இருக்கும் நம் மாணவர்கள் கல்விசார்ந்து எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்க ஆதரவு வழங்கும். மாணவர்கள் மட்டுமின்றி, மூத்தோருக்குக் கைகொடுக்கும் விதமாக நடப்பில் இருக்கும் திட்டங்களும் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

“நம் பிரதமர் தேசிய தின பேரணி உரையில் குறிப்பிட்டதுபோல நம் சமுதாயத்தினருக்கு தொடர்ச்சியான ஆதரவு எப்போதும் வழங்கப்பட்டு வரும்,” என்று அமைச்சர் சண்முகம் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரும் நிதி திரட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான அருண் வாசுதேவ் கிருஷ்ணன், “தமிழர் பேரவை புதிதாக ‘எம்இஎஸ்’ குழும நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகம்மது அப்துல் ஜலீலை புரவலராக நியமித்துள்ளது.

“அத்துடன், தமிழர் பேரவை புதிதாக உருவாக்கிய ஆலோசனைக்குழு சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் அருமைசந்திரன் ஆகிய இருவரால் வழிநடத்தப்படும். மேலும், எங்களைப் போன்ற இளையர்களின் ஒத்துழைப்பால் தமிழர் பேரவையின் இளையர் பிரிவு தொடர்ந்து சமூகத்துக்கு சேவையாற்றி வரும்,” என்று குறிப்பிட்டார்.

“மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி ஊக்குவிப்பதோடு, அவர்களின் கற்றலை மேம்படுத்தவதிலும் நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கும் திட்டங்கள் முக்கிய பங்காற்றவுள்ளன. இதனால், மாணவர்கள் புலனாகாத திறன்களையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதுவரையில் பெரிய அளவில் நிதி திரட்டு நிகழ்வு நடக்கவில்லை என்றாலும் இது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும்,” என்று தமிழர் பேரவையின் இளையர் பிரிவு துணைத் தலைவரான செந்தில் ஆண்டியப்பன், 24, கூறினார்.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற அமைப்பை பிரதிநிதித்து விருந்து நிகழ்வில் பங்குகொண்ட திரு வி. கலைச்செல்வம், 63, “நாங்கள் ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த விருந்து நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்வோம். இந்த அமைப்பு சார்பாகவும் நான் நடத்தும் நிறுவனம் சார்பாகவும் என்னால் முடிந்த பங்கை கல்வி நிதிக்கு அளித்துள்ளேன். ஒரு சிங்கப்பூரராக, நாட்டுப்பற்றுடன் நம் மக்களுக்குச் சேவை ஆற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்று சொன்னார்.

அமைப்புகள் தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் மக்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்