மின்னியல் திறன்களைப் பெற வயது தடையல்ல

மின்னியல் திறன்களைப் பெற வயது தடையல்ல

3 mins read

ஒரு புதிய 4ஜி நவீன கைபேசியை அண்மையில் வாங்கிய திரு பத்மநாபன் குஞ்சப்பன் அதில் பல செயல்பாடுகள் உள்ளதைக் கண்டு அது பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினார். அருகில் உள்ள சமூக மன்றத்தில் இணைந்து மின்னிலக்க பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். தற்போது கட்டணங்கள் செலுத்துவது, அரசாங்க உதவித் திட்டங்களையும் அறிந்துகொள்வது போன்ற செயல்களைத் தனது கைபேசி வழியாகவே செய்யலாம் என்பதைக் கற்றுக்கொண்டார் திரு பத்மநாபன்.

-

''மிகவும் புதிதாக பல விஷயங்கள் இருப்பது சற்று கடினமாக இருந்தாலும் முயற்சியைக் கைவிடாமல் செயல்படுத்த விரும்புகிறேன். அதிக அளவு தன்னம்பிக்கையையும் பொறுமையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ''ஆனால் முக்கியமாக பயிற்றுவிப்பாளர் களை நான் அவசியம் குறிப்பிடவேண்டும். அவர்கள் மிகவும் பணிவன்புடன், பொறுமையாக எங்களின் அனைத்து பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு எங்களுக்கு நற்சேவையாற்றுகின்றனர். ''நான் மாறுநேர வேலை (ஷிஃப்டு) நேரத்தில் பணியாற்றுவதால், நேரம் கிடைப்பது சவாலாக உள்ளது. இருந்தாலும் நான் அதிகம் கற்றுக்கொள்ள விரும்புவதால் கூடுதல் பயிற்சி பெற வேண்டிய அவசியம் உள்ளது. எனக்கு புதிய கைபேசிச் செயலிகளைப் பயன்படுத்துவது எப்படி என்று அறிய ஆவலாக உள்ளது. தற்பொழுது செயலியில் செய்திகளை அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் கற்றுவரும் திரு பத்மநாபன், தொலைபேசியில் காணொளி அழைப்புகளை எப்படி ஏற்பது போன்றவற்றையும் பயின்று வருகின்றார். ''பயிற்றுவிப்பாளர்களின் உதவியுடன் படிப்படியாக நான் பயிற்சி பெற்று வருகின்றேன். அதிக நேரம் என்னைப் போன்றோருக்கு கிடைத்தால்தான் எங்களுக்கு புரியும் வகையில் நாங்கள் கற்றுக்கொள்ளமுடியும். "மேலும் நவீன திறன்பேசிகள், மிகவும் மென்மையானவை. விரலின் நுனி பட்டவுடனேயே அவை செயலாற்றுவதால், மிகவும் நிதானமாக நாங்கள் செயல்படவேண்டியுள்ளது. எனது நண்பர்கள் பலரிடம் பயிற்சியில் கலந்துகொள்ளச் சொல்லி வருகிறேன்,'' என்றார் திரு பத்மநாபன்.

கைகளிலேயே அடக்கமான மின்னியல் உலகம்

தமது 64 வயதில் மின்னிலக்கத் திறன்கள் கற்பது சிரமமாக இருக்கும் என்று எண்ணிய திருமதி ஆதிலெட்சுமி காசிநாதனுக்கு ராடின் மாஸ் சமூக மன்றத்தின் வகுப்புகள் மிகவும் எளிமையாக அமைந்தன.

-

''எனது அண்டைவீட்டாரான திருமதி சிவலெட்சுமி கூறிய அறிவுரையின் பயனாக ராடின் மாஸ் சமூக மன்றத்தில் மின்னிலக்கச் செயலிகள் பற்றி அடிப்படை பயிற்சிகள் நடப்பதை அறிந்துகொண்டேன். கடந்த பிப்ரவரி மாதம் முதல் நான் அங்கு சென்று வருகிறேன். நமது நேரம் மற்றும் மனநிலைக்கேற்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் கூட நாம் பயிற்சி பெறலாம். அடுத்த பயிற்சிக்குச் செல்வதற்கு நான் ஆவலாக இருக்கிறேன். ஆரம்பத்தில் சற்று கடினமாகத் தோன்றினாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் நாம் விரைவில் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். பயிற்றுவிப்பாளர்கள் மிகவும் பொறுமையுடன் ஊக்கம் தரும் வகையில் எங்களுக்கு உதவி செய்கின்றனர்,'' என்றார் அவர். "அடிப்படை கைபேசி செயல்முறைகள், இணைய பயன்பாடு, சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அத்தியாவசிய சேவைகள், அடையாள அட்டை போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கான விண்ணப்பங்கள் போன்ற பலவற்றை நான் வகுப்புகளில் கற்றுக்கொண்டு வருகிறேன். வாரம் மூன்றுமுறை கூட வகுப்புக்குச் செல்ல ஆர்வம் இருந்தாலும் கொவிட்-19 கட்டுப்பாடுகளினாலும் மற்ற குடியிருப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதாலும் வாரம் ஒரு முறை பயிற்சிக்குச் செல்கிறேன். "எனக்கு முக்கியமாக மருத்துவ ஆலோசனைக்கான முன்பதிவு விவரங்களும் பேருந்து நேரமும் தெரிந்துகொள்ள செயலிகளின் பயன்பாடு அவசியமாகின்றது. நான் சுயமாக முயற்சி செய்வதை எனது பிள்ளைகளும் பார்த்து பெருமைப்படுகிறார்கள். பல சேவைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைப்பதும் ஒரு முக்கிய செய்தி. ''அதேசமயம் இணையத்தில் நடக்கக்கூடிய சட்டவிரோத செயல்கள் பற்றியும் விழிப்புணர்வு பயிற்சியில் தெரிந்துகொண்டேன். பயிற்றுவிப்பாளர்களின் துணையுடன் பலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம். இந்தப் பயிற்சிகளை நான் ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். ''பயிற்றுவிப்பாளர்கள் நான் பயிற்சியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொள்வதைப் பாராட்டி, பரிசுகளையும் தந்துள்ளனர். எனது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் இந்தப் பயிற்சிகளில் அவசியம் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்தி வருகிறேன். வயது ஒரு வரம்பில்லை. தன்னம்பிக்கையுடன் நாம் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும்," என்று புன்முறுவலுடன் கூறினார் திருமதி ஆதிலட்சுமி.

வாருங்கள் கற்கலாம்

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் மெய்நிகர் மின்னிலக்கக் கருத்தரங்கில் பங்கேற்று கற்றுக்கொள்ளுங்கள். இணையம்வழியான இந்தக் கருத்தரங்குத் தொடரில் உங்கள் சுகாதாரத்தையும் நலனையும் மேம்படுத்தவும், அரசாங்கச் சேவைகளை அணுகவும், இணையம்வழி பொருள் வாங்கவும், இன்னும் பலவற்றைச் செய்யவும் துணைபுரியும் பலதரப்பட்ட மின்னிலக்கத் திறன்களும் கருவிகளின் செயல்பாடும் கற்பிக்கப்படும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் பிற்பகல் 3.00 மணியிலிருந்து 3.30 மணி வரை நடைபெறும் இந்த இலவச இணையக் கருத்தரங்குகளில் 'ஸூம்' (Zoom) வழியாகக் கலந்து கொள்ளுங்கள்.

மெய்நிகர் மின்னிலக்கக் கருத்தரங்கில் பங்கேற்க இன்றே go.gov.sg/dp என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள்