சிங்கப்பூர் சிறைத் துறை, பிற சமூக பங்காளித்துவ அமைப்பு களுடன் இணைந்து முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் சமூகத்தில் காலடி எடுத்து வைக்க ஆதரவளிக்கும் வகையில் குற்ற எதிர்ப்பாளர்கள் அமைப்பு அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் இந்த திட்ட அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் வருகை புரிந்தார்.
200க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமல்லாது, இதுவரை மொத்தம் 53 நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு கைகொடுக்க முன்வந்துள்ளன.
முன்னாள் குற்றவாளிகள் சரியான பாதையில் செல்லவும் குற்றச்செயல்களுக்குத் திரும் பாதிருக்கவும் வழி வகுப்பதே குற்ற எதிர்ப்பாளர்கள் அமைப்பு என்ற புதிய திட்டத்தின் நோக்கம்.
முன்னாள் குற்றவாளியாக இருந்த திரு டேவிட் கிங் துரைராஜன் தற்போது சிங்கப்பூர்ப் பின்னலச் சேவைச் சங்கம் தொண்டூழியராக உள்ளார்.
"ஒரு முன்னாள் குற்றவாளியான நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். என்னைப் போன்ற பிறருக்கு புனர்வாழ்வையும் மறு ஒருங்கிணைப்பையும் உருவாக்க, அவர்களிடையே தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்," என்று திரு டேவிட் கூறினார். தனக்கு உதவிய இந்தச் சமூகத்திற்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்க விரும்பு கிறார் இவர்.
"முன்னாள் குற்றவாளிகளுடன் அதிகம் பணியாற்றியுள்ள குற்ற எதிர்ப்பாளர்கள் கட்டமைப்பின் உறுப்பினர்கள், மீண்டும் குற்றச்செயல்களுக்கு அவர்கள் திரும்புவதைத் தடுக்க பெரிதும் உதவுவார்கள்," என்றார் டாக்டர் ஃபைஷல் இப்ராஹிம்.

