கொவிட்-19 எனும் இருண்ட காலத்தின் உடனடிச் சவால்களை நாடு சமாளித்த பின்னர், நீண்ட காலக் குறிக்கோள்களுடன் வரையப்பட்டுள்ளது இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம்,.
2023, 2024ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக பொருள், சேவை வரி 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயரும். உயர் சம்பளம் பெறுவோருக்கு கூடுதல் வரி, ஊழியர்களின் தொடர்திறன்மேம்பாடு ஆகியவைமீது கவனம் செலுத்துகிறது இந்த வரவுச் செலவுத் திட்டம். அதே நேரத்தில் குடும்பங்களும் மறக்கப்படவில்லை. அன்றாட செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் அவர்களுக்குக் கைகொடுக்கவுள்ளது. வரவு செலவுத் திட்டம் பற்றி பொதுமக்களிடம் பேசியது தமிழ் முரசு.
ஈராண்டுகளுக்கு முன்னர் உபசரிப்புத் துறையில் பணியாற்றிய முகுந்தன் முக்தி, 38, தாம் ஆட்குறைப்புக்கு ஆளாகப்போவதை முன்கூட்டியே உணர்ந்துவிட்டார். "நான் வேலை பார்த்த துறையில் பலர் வேலை இழந்ததைக் கண்டேன். எனவே வேறொரு துறையில் சேருவதற்கான திறன்களைக் கற்க முன்கூட்டியே செயல்பட்டேன்," என அவர் கூறினார். தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்ற தம்மைத் தயார்படுத்திக்கொண்டதால் விரைவில் புதிய வேலைக்கு அவரால் மாற முடிந்தது.
பாலர் பள்ளி ஆசிரியரான மனைவி ரேவதி மோகன், 38, பாலர் பள்ளியில் பயிலும் ஆறு வயது மகள் அதினா இலக்கியா, தாயார் தேன்மொழி நாகப்பன், 64 ஆகியோர் கொண்ட அளவான, மூன்று தலைமுறைகள் கொண்ட குடும்பம் திரு முகுந்தனின் குடும்பம்.
"வரும் 2023லிருந்து பொருள் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஏற்படவிருக்கும் உயர்வைச் சமாளிக்க வேண்டும். என் மகள் அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்று செல்கிறார். அப்போது நாம் செய்யும் ஒவ்வொரு செலவிலும் ஜிஎஸ்டியின் தாக்கம் இருக்கும். செலவுகள் கையைக் கடிக்கத் தான் செய்யும்," என்று திரு முகுந்தன் கூறினார்.
இருப்பினும் தமது குடும்பச் செலவுகளை ஈடுகட்ட, வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவு தொகுப்புத் திட்டம் பெரிதும் உதவும் என்று அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்தார்.
செய்தி: கி. ஜனார்த்தனன், சக்தி மேகனா

