விபத்தில் ஊழியர் மீது லாரி ஏறியது: சம்பவத்தை நேரில் பார்த்தவர்

விபத்தில் ஊழியர் மீது லாரி ஏறியது: சம்பவத்தை நேரில் பார்த்தவர்

1 mins read
Google News Preferred Icon

மத்திய வர்த்தக வட்டாரத்தில் நேற்று பிற்பகல் ஒரு காரும் ஒர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஐவர் காயமுற்றனர். விபத்தில் சம்பந்தப்பட்ட அந்த லாரி, வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

இந்த விபத்தின் காரணமாக அந்த லாரியில் இருந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் லாரியின் பின்பகுதியிலிருந்து தூக்கி வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த லாரி ஓட்டுநர் லாரியைப் பின்னால் ஓட்டியதாகவும் இதனால் சாலையில் விழுந்து கிடந்த ஊழியர்களில் ஒருவர் மீது அந்த லாரி ஏறியதாகவும் இதனை நேரில் பார்த்த உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஷின் மின் சீன நாளிதழிடம் கூறினார்.

"காயமடைந்த அந்த ஊழியர் வலியைப் பொறுக்க முடியாமல் கதறினார். அவர் சுயநினைவுடன் இருந்தாலும் அவரால் பேச முடியவில்லை," என்றார் அவர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரும் அதிலிருந்த பயணியும் அதிர்ச்சியில் உறைந்திருந்ததாகத் தெரிகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வரும்வரை அவர்கள் காரைவிட்டு வெளியேறவில்லை என்றார் அந்த விநியோக ஊழியர்.

சம்பவ இடத்தில் நான்கு அவசர மருத்துவ வாகனங்கள் இருந்ததை இணையத்தில் வலம் வரும் காணொளிகள் காட்டின.

கிராஸ் ஸ்திரீட், செசில் ஸ்திரீட் சந்திப்பில் இந்த விபத்து குறித்து நேற்று மாலை 5.44 மணிக்கு தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.

விபத்தில் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

-
குறிப்புச் சொற்கள்
விபத்து