கி.ஜனார்த்தனன்
சிறுவயதிலேயே தமது வீட்டில் நாய் ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்த குமாரி ஆர்த்தி சங்கர், அப்போது முதல் விலங்குகளின் நலனில் அக்கறை செலுத்தத் தொடங்கிவிட்டார்.
இப்போது 34 வயதாகும் குமாரி ஆர்த்தி புதிதாக வழிநடத்தும் சிங்கப்பூர் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தில் 200க்கும் மேற்பட்ட விலங்குகள் இவரது பராமரிப்பில் உள்ளன.
மக்கள் கழகத்தில் 10 ஆண்டுகளுக்குமேல் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த குமாரி ஆர்த்தி, கடந்த மாதம் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மக்களிடையே குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கான வசதியைக் கொண்டுள்ள 'இம்பேக்ட் அட் ஹோங் லிம் கிரீன் பார்க்'கில், பல்வேறு தொண்டூழிய அமைப்புகளுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், கால காலத்திற்கும் சங்கத்தின் நற்செயல்களைத் தொடர விரும்புகிறார்.
"விலங்குநல ஆர்வலர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி அனைவருமே விலங்குநலம் பேணுதலை அவர்களின் வாழ்வியலில் புகுத்துவதே எங்களது முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும்," என்று இவர் சொன்னார்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் சமூகத்தில் வசதி குறைந்தோருக்கு உரிய வளங்களைத் திரட்டுவதில் கொண்டுள்ள தமக்குள்ள அனுபவத்தையே தமது பலமாகக் கருதுகிறார் குமாரி ஆர்த்தி.
கிருமிப் பரவலால் விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க செல்லப் பிராணி உரிமையாளர்களுக்கும் பொதுமக்களால் பராமரிக்கப்படும் 'சமூக' விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்களுக்கும் இந்த வளங்களைப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்தார்.
1,832 விலங்குகளுக்கு உணவு அளிக்கும் இந்தச் செல்லப் பிராணி உணவு ஆதரவுத் திட்டம், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விரிவு கண்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 பரவத் தொடங்கிய சென்ற ஆண்டில் அவசர மீட்புப் பணிகள் மூலமாக சங்கத்திற்குக் கொண்டுவரப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை 995. இந்த எண்ணிக்கை இப்போது 944ஆகக் குறைந்துள்ளது.
கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு, சங்கத்தில் சேர்க்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை 2020ல் 56ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 41ஆகக் குறைந்துள்ளது.
சங்கத்திலிருந்து தத்தெடுக்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை 2020ல் 732ஆகவும் 2021ல் 717 ஆகவும் உள்ளது.
ஆயினும், இந்த எண்ணிக்கை வித்தியாசங்களைக் கண்டு, ஒரு குறுகிய முன்யோசனைக்கு வராமல், அவற்றை நடுநிலையுடன் பார்க்கும்படி குமாரி ஆர்த்தி கேட்டுக்கொண்டார்.
"தத்தெடுப்பதை ஊக்குவிப்பதும் விலங்குகள் கைவிடப்படுவதை முடிந்தவரை தடுப்பதும் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று," என்கிறார் இவர்.
இச்சங்கம் ஓர் அரசுசாரா அமைப்பு என்பதால் மானியங்கள் அவ்வப்போது கிடைத்தாலும் தொடச்சியான நிதியுதவி எதுவும் கிடையாது என்பதைப் பொதுமக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறார் குமாரி ஆர்த்தி.
பெரும்பாலும் 'எஸ்பிசிஏ' நன்கொடைகளை நம்பியிருக்க வேண்டியுள்ளதாக இவர் சொன்னார்.
தொழில்நுட்ப, சமூக ஊடக உத்திகள் இந்த முயற்சிக்குப் பெரிதும் கைகொடுத்திருப்பதாகவும் இவர் கூறினார்.
நிதித்திரட்டைப் பொறுத்தவரையில் இளையர்களின் யோசனைகளையும் பங்களிப்புகளையும் வரவேற்பதாகவும் குமாரி ஆர்த்தி தெரிவித்தார்.
விலங்குவதைச் சங்கத்திற்கு பல்வேறு விலங்குகள் அபாயகரமான நிலையில் அனுப்பப்படுவதை இவர் சுட்டினார்.
தங்கள் வசமுள்ள விலங்குநல மருத்துவர்கள், தாதியர்கள், தொண்டூழியர்கள் முடிந்தவரை முயன்று வந்தாலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்கிறார் இவர்.
"சிலர் வீட்டுச் சன்னல்களில் வலைத்தடுப்புகளைப் பொருத்தாததால் பூனைகள் உயரத்திலிருந்து கீழே விழ நேரிடுகிறது. இத்தகைய ஆபத்துகளைக் குறைப்பதற்கான இயக்கங்கள் விரிவுபடுத்தப்படும்," என்றார் உயிர்நேயமிக்க குமாரி ஆர்த்தி.

