அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத அரையாண்டு போனஸ்

அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத அரையாண்டு போனஸ்

2 mins read
e3ffee08-e0f4-4116-a42a-b9344742eb72
MX13(I) மற்றும் MX14க்குச் சமமான தரநிலைகளில் உள்ள அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒருமுறை மட்டும் $250 ஊக்கத்தொகை பெறுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 0.45 மாத அரையாண்டு ஊக்கத்தொகை (போனஸ்) வழங்கப்படும் என்றும் இளநிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக $400 வரை ஒருமுறை மட்டும் வழங்கப்படும் என்றும் பொது சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) வெளியிட்ட ஓர் அறிக்கையில், MX13(I) மற்றும் MX14க்கு இணையான தரநிலைகளில் உள்ள அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமுறை மட்டும் $250 வழங்கப்படும் என்று பொது சேவைப் பிரிவு கூறியது.

MX15 மற்றும் MX16க்கு இணையான தரநிலைகளில் உள்ள அரசு ஊழியர்களும் செயல்பாட்டு ஆதரவுத் திட்டத்தில் உள்ளவர்களும் ஒருமுறை ஊக்கத்தொகையாக $400 பெறுவர்.

2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் செயல்திறனையும், நாட்டின் பொருளியல் கண்ணோட்டத்திற்கான பாதகமான அபாயங்கள் கணிசமான அளவில் நீடிப்பதையும் கருத்தில்கொண்டு இந்த அரையாண்டு போனஸ் வழங்கப்படுகிறது என்று பொது சேவைப் பிரிவு தெரிவித்தது.

கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் 0.4 மாத அரையாண்டு போனசையும், 1.3 மாத ஆண்டிறுதி போனசையும் பெற்றனர். 2024ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்களின் அரையாண்டு போனஸ் 0.45 மாதமாக இருந்தது.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அரசாங்கமும் அந்தத் தொழிற்சங்கங்களும் இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான பொருளியல் நிலவரங்களைக் கண்காணித்து, ஆண்டிறுதி போனசை முடிவுசெய்வதில் தேசிய சம்பள மன்றத்தின் வழிகாட்டுதல்களையும் கருத்தில்கொள்ளும் என்றும் பொதுச் சேவைத் துறை தெரிவித்தது.

தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் சாம் ஹுய் ஃபோங், “இந்த ஊக்கத் தொகை, அரசு ஊழியர்களின் பணியை அங்கீகரிப்பதோடு, பொருளியல் சூழலையும் கருத்தில் கொள்ளும் ஒரு நியாயமான, சமநிலையான முடிவு,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்