அரசு ஊழியர்களுக்கு 1.05 மாத ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு நவம்பர் 25ஆம் தேதி ஓர் அறிக்கையில் அறிவித்தது.
MX15 மற்றும் MX16 க்குச் சமமான தரநிலைகளில் உள்ள இளைய அதிகாரிகளும், செயல்பாட்டு ஆதரவுத் திட்டத்தில் உள்ளவர்களும் கூடுதலாக $600ஐப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டு மத்தியில் வழங்கப்பட்ட 0.45 மாத போனஸ் தொகையையும் சேர்த்து, அரசு ஊழியர்கள் 1.5 மாதங்கள் முழு ஆண்டு வருடாந்தர மாறுவிகித (AVC) தொகையைப் பெறுவார்கள். மேலும் இளைய தரநிலைகளில் இருப்பவர்கள் ஜூன் மாதத்தில் பெற்ற $250யைச் சேர்த்து, 2024ல் S$850 வரை மொத்த தொகையாகப் பெறுவார்கள் என்று பொதுச் சேவை பிரிவு கூறியது.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாதத்திற்கான ஓய்வூதியம் அல்லாத வருடாந்தர உதவித்தொகையை (NPAA) அதாவது 13வது மாத போனஸை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024ல் சுமார் 3.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதையும் 2024/2025க்கான தேசிய சம்பள மன்றத்தின் (NWC) வழிகாட்டுதல்களையும் கருத்தில்கொண்டு, இந்த ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படுகிறது என்று பொதுச் சேவைப் பிரிவு மேலும் கூறியது.
பொதுத்துறை தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட அணுக்கமான ஆலோசனையுடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொதுத் துறை ஊழியருக்கான ஒருங்கிணைந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ் குமார் திவாரி கூறுகையில், “நமது பொருளியல் நன்றாக இருக்கும்போது, இந்த வெற்றிக்குப் பங்களித்த நமது அரசு ஊழியர்களுக்கு அதற்கேற்ப வெகுமதி அளிக்கப்படுவது முக்கியம்,” என்றார்.
“கூடுதலான ஒரு முறை வழங்கீடு, உயரும் வாழ்க்கைச் செலவை நிர்வகிக்க இளைய தரநிலை அதிகாரிகளுக்கு உதவும்,” என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) மற்றும் பொதுத்துறை தொழிற்சங்கங்களும் ஊதியம் வழங்கும் முடிவை ஆதரிக்கின்றன என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் சாம் ஹுவி ஃபோங் கூறினார்.
மேலும், அரசு ஊழியர்கள் தங்கள் திறமைகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்தும் திட்டங்களின் சேருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் போட்டித்தன்மையுடன் இருப்பதும் எதிர்கால சவால்களுக்கு தயாராக இருப்பதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.